கோவை- மஞ்சூர் சாலையில் அரசு பஸ், தனியார் வாகனங்களை வழிமறித்த காட்டு யானை கூட்டம்-பயணிகள் பீதி

மஞ்சூர் : நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை. மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் உள்ள இப்பகுதியில் நீர் மின் நிலையம் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில தினங்களாக 2 குட்டிகளுடன் 5 காட்டு யானைகள் மந்து, கெத்தை, பெரும்பள்ளம் பகுதிகளில் சுற்றி திரிகின்றன. பெரும்பாலும் சாலைகளிலேயே யானைகள் நடமாடுவதால் இவ்வழியாக செல்லும் அரசு பஸ்கள், தனியார் வாகனங்களை யானைகள் வழிமறிப்பது வாடிக்கையாக உள்ளது.

நேற்று முன்தினம் சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கோவையில் இருந்து மஞ்சூருக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இரவு 8 மணியளவில் கெத்தை அருகே வந்தபோது குட்டிகளுடன் காட்டு யானைகள் பஸ்சை வழிமறித்தபடி நடுரோட்டில் நின்றன. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர் பஸ்சை மெதுவாக இயக்கி சாலையோரமாக ஒதுக்கி நிறுத்தினார்.

பயணிகள் அச்சம் அடைந்தனர். 45 நிமிடங்களுக்கு பிறகு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றன. இதை தொடர்ந்து அரசு பஸ் அங்கிருந்து மஞ்சூருக்கு புறப்பட்டு சென்றது.

நேற்று காலை மஞ்சூர் பகுதியில் இருந்து கோவைக்கு சென்ற தனியார் வாகனத்தையும் மந்து என்ற இடத்தில் யானைகள் வழிமறித்தன. நீண்ட நேரத்திற்கு பின் யானைகள் அங்கிருந்து சென்றதை தொடர்ந்து தனியார் வாகனம் புறப்பட்டு சென்றுள்ளது. இந்த யானைகள் சாலையோரம் வளர்ந்துள்ள சிறு மரங்கள், கொண்டை ஊசி வளைவுகளில் அமைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகைகளையும் கீழே சாய்த்துள்ளன. மஞ்சூர்-கோவை சாலையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக யானைகளின் நடமாட்டம் இல்லாததால் இவ்வழியாக இயக்கப்பட்ட அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் சென்று வந்தன. ஆனால் தற்போது காட்டு யானைகள் மீண்டும் கெத்தை பகுதிக்கு திரும்பி அட்டகாசம் செய்கின்றன.

Related Stories: