அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி ஓ பன்னீர் செல்வம் மனு... நேற்று மாலை தான் தனக்கு அழைப்பிதழ் வந்ததாக சாடல்!!

சென்னை: ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி ஓ பன்னீர் செல்வம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வானகரத்தில் கடந்த ஜூன் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு பூதாகரமாக வெடித்தது. இக்கூட்டத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த 23 தீர்மானங்களை பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்தனர். இதனால், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறினர். அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி நடைபெறும் என அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து பொதுக்குழுவில் பங்கேற்க ஓ பன்னீர் செல்வத்திற்கு அதிமுக சார்பில் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டது. அதிமுக அனுப்பிய அழைப்பிதழை தேனி பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ் வீட்டில் இருந்தவர்கள் நேற்று மாலை வாங்கினர். இந்த நிலையில் ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி ஓ பன்னீர் செல்வம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், அதிமுக பொதுக்குழுவுக்கான அழைப்பிதழ் 15 நாட்களுக்கு முன்பு வழங்கப்பட வேண்டும். ஆனால் ஜூலை 11ல் பொதுக்குழு நடப்பதாக நேற்று மாலை தான் எனக்கு அழைப்பிதழ் வந்தது. எனவே ஜூலை 11ல் நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்,என்று  கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு ஓபிஎஸ் தரப்பினர் முறையீடு செய்தனர். இதனை ஏற்று வழக்கு நாளை விசாரிக்கப்படும் என்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உறுதி அளித்தார்.

Related Stories: