அமெரிக்காவில் சோகத்தில் முடிந்த சுதந்திர தினம்.. மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி; உடலில் தோட்டா பாய்ந்த 24 பேருக்கு சிகிச்சை!!

வாஷிங்டன் : அமெரிக்காவின் சுதந்திர தினமான நேற்று அதன் கொண்டாட்ட பேரணியின் போது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 24 பேருக்கு உடலில் தோட்டாக்கள் பாய்ந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் சிகாகோ நகரில் தெற்கு புறநகர் பகுதியில் அமைந்து இருக்கும் ஹைலேண்ட் பார்க் என்ற இடத்தில் நடந்துள்ளது. சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக அங்குள்ள தெரு ஒன்றில் ஆண்கள், பெண்கள் பேண்டு வாத்தியங்களுடன் பேரணி சென்று கொண்டு இருந்தனர். பேரணி தொடங்கிய 10வது நிமிடத்தில் ஒரு கட்டிடத்தின் மேற்கூரையில் நின்று இருந்த ஒரு மர்ம நபர் திடீரென்று துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்.

இதில் 6 பேர் அந்த இடத்திலேயே மரணம் அடைந்தனர். துப்பாக்கிச் சத்தம் கேட்டு பலர் நாலாபக்கமும் தெறித்து ஓடினர். அப்போதும் அந்த நபர் தொடர்ந்து சுட்டுக் கொண்டே இருந்தார். இதில் மேலும் 24 பேரின் உடலில் குண்டுகள் பாய்ந்தன. துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தீவிரவாதியா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒருபுறம் துப்பாக்கிச் கலாச்சாரத்தை ஒடுக்க அமெரிக்கா முயன்று வரும் வேளையில், மறுபுறத்தில் இது போன்ற ஈவு இரக்கமற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருவது அந்நாட்டு மக்களை கலக்கத்திற்கு உள்ளாக்கியுள்ளது. கடந்த மே மாதம் டெக்சாஸ் மாகாணத்தில் பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஆசிரியர்கள் உட்பட 19 குழந்தைகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.   

Related Stories: