கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் சாலையில் திரியும் மாடுகளால் விபத்து: வாகன ஓட்டிகள் கடும் அவதி

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் ஆயிரக்கணக்கான காய்கறி, பழம் மற்றும் பூக்கடைகள் உள்ளன. இந்த கடைகளில் விற்பனையாகாமல் தினசரி வீணாகும் காய்கறி, பழங்கள் மார்க்கெட் வளாகத்தில் கொட்டப்படுகிறது. இதை சாப்பிட ஏராளமான மாடுகள் மார்க்கெட் வளாகத்தில் வலம் வருகின்றன. இதனால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இதேபோல், கோயம்பேடு மேம்பாலத்தில் இருந்து மதுரவாயல், பூந்தமல்லி செல்லக்கூடிய பிரதான சாலையில் தினமும் காலை முதல் மாலை வரை எருமை மாடுகள் கூட்டம், கூட்டமாக திரிகின்றன.

இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி படுகாயமடைகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி படுகாயமடைகின்றனர். சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. எனவே, மதுரவாயல், பூந்தமல்லி செல்லக்கூடிய பிரதான சாலை,  கோயம்பேடு மார்க்கெட் வளாகம் ஆகிய பகுதிகளில், போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘கோயம்பேடு மார்க்கெட் சுற்றி உள்ள நெற்குன்றம், சின்மையா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலர் எருமை மற்றும் பசு மாடுகளை வளர்க்கின்றனர். இந்த மாடுகளை அதன் உரிமையாளர்கள் முறையாக வளர்க்காமல், சாலையில் சுற்றித்திரிய விடுகின்றனர். மேலும், கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, பூ உள்ளிட்ட குப்பை கழிவுகளை சாப்பிட மாடுகள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. இதனால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு  இடையூறாக உள்ளது. மேலும், மார்க்கெட் அருகே உள்ள சாலைகளில் மாடுகள் கூட்டமாக சுற்றி வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், வாகன  ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, இந்த மாடுகளை படிக்கவும், இவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: