பொதுக்குழு கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து ஆதரவாளர்களுடன் எடப்பாடி ஆலோசனை

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். வானகரத்தில் கடந்த ஜூன் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு பூதாகரமாக வெடித்தது. இக்கூட்டத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த 23 தீர்மானங்களை பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்தனர். இதனால், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறினர். அன்றைய தினம் தற்காலிக அவைத்தலைவராக இருந்த தமிழ்மகன் உசேன் நிரந்தர அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார். அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி நடைபெறும் என அறிவித்தார்.

இந்தபொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் சண்முகம் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வர உள்ளது. இந்தசூழலில், மீண்டும் அதிமுக பொதுக்குழு நடத்துவது குறித்து அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டத்தில் பொதுக்குழு நடத்தப்பட்டது.  

இந்தசூழலில், தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஆன்லைனில் பொதுக்குழுவை நடத்தவும் தலைமை கழக நிர்வாகிகள் பரிசீலித்து வந்தனர். ஆனால், முறைப்படி அழைப்பிதழ் அனுப்பப்பட்டு அனைவரையும் நேரடியாக வரவழைத்து கூட்டம் நடத்தினால் தான் சரியாக இருக்கும் எனவும், மேலும், கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடித்து பொதுக்குழு கூட்டத்தை நடத்தவும் தற்போது எடப்பாடி தரப்பு திட்டமிட்டுள்ளது. அதன்படி, 2,665 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு திறந்த வெளியில் தனித்தனி இருக்கை மற்றும் முகக்கவசம் கட்டாயம் அணிந்து கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால், பொதுக்குழு உறுப்பினர்கள் தவிர்த்து மற்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. கொரோனா விதிகளின்படி ஒவ்வொரு உறுப்பினர்களும் இடையே 2 அடி இடைவெளிவிட்டு அமர வைக்கப்பட உள்ளனர். இதற்காக மண்டபத்துக்கு வெளியேயும் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பொதுக்குழு கூட்டத்துக்கு வரும் உறுப்பினர்களுக்கு முகக்கவசம், சானிடைசர் போன்றவைகளையும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொதுக்குழு கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து எடப்பாடி பழனிசாமி நேற்று தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், வளர்மதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: