தமிழர்களை ஒருங்கிணைக்கும் ஆற்றல் தமிழுக்கு மட்டும்தான் இருக்கிறது: வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை ஆண்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழர்களை ஒருங்கிணைக்கும் ஆற்றல் தமிழ்மொழிக்கு மட்டும்தான் இருக்கிறது என்று வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை ஆண்டு விழாவில் காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். வட அமெரிக்க தமிழ் சங்க பேரவையான ‘பெட்னா’ அமைப்பின் 35வது ஆண்டு விழாவை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது முகாம் அலுவலகத்தில் இருந்து நேற்று காணொலி காட்சி மூலம் பேசியதாவது: தமிழ் அமைப்பாக, தமிழின அமைப்பாக நீங்கள் செயல்பட்டு வருகிறீர்கள். கொரோனா காலத்தில் நீங்கள் செய்த உதவிகளை தமிழ்நாடு மறக்கவில்லை. அப்போதே, இதன் அமைப்பாளர்கள் அனைவரையும் வாழ்த்தி நான் காணொலியில் பேசியிருக்கிறேன். அப்போதே, என்னை சந்தித்த பெட்னா அமைப்பாளர்கள், ‘‘இந்தாண்டு ஜூலை முதல் வாரத்தில், பெட்னா சார்பில் மிகப்பெரிய விழா நடக்க இருக்கிறது.

இது பெட்னாவின் 35ஆவது ஆண்டு விழா. அதில் கலந்து கொள்ள வேண்டும்’ என்று என்னிடம் கோரிக்கை வைத்தார்கள். இம்முறை வரவில்லை என்றாலும், நிச்சயமாக ஒரு முறை உங்கள் மாநாட்டில் கலந்து கொள்வேன். இந்த விழாவில் உலக தமிழ் பீடம் விருதையும் அளிக்க இருக்கிறீர்கள். 2020ம் ஆண்டுக்கான உலக தமிழ் பீட விருதை மறைந்த இலக்கிய செம்மல் ‘தமிழ்கோ இளங்குமரனாருக்கும்’ 2021ம் ஆண்டுக்கான விருதை மாபெரும் தமிழ்க்கவி ‘ஈரோடு தமிழன்பனுக்கும்’ வழங்குவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இதன் பரிசுத்தொகை 15,000 அமெரிக்க டாலர்.

6வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த ஓராண்டு காலத்தில், தமிழ்நாட்டு அரசுத் துறை பணியிடங்களில் நுழைபவர்களுக்கு தமிழ்மொழி அறிவு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தருவதோடு, தமிழினத்தைக் காக்கும் ஆட்சியாகவும் நடந்து வருகிறது. தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்கள் நலனிலும் அக்கறை கொண்ட ஆட்சியாக, திமுக ஆட்சி அமைந்திருக்கிறது. உலகளாவிய தமிழாட்சியை இங்கிருந்து நடத்தி வருகிறோம். அயலகத் தமிழர் மேன்மைக்காக தன்னுடைய வாழ்வையே ஒப்படைத்தவர்தான் கலைஞர்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் பல்வேறு தேவைகளை நிறைவு செய்வதற்காக, வெளிநாடுவாழ் தமிழர் நலச்சட்டம் 2011ம் ஆண்டு மார்ச் 1ம் நாள் திமுக அரசால் இயற்றப்பட்டது. அப்போது ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக, நம்மால் அதை அமைக்க முடியவில்லை. மீண்டும் ஆட்சிக்கு வந்த நான், ‘வெளிநாடுவாழ் தமிழர் நலவாரியம்’ அமைக்கப்படும் என்பதை ஐந்தே மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவித்தேன். ஜனவரி 12-ம் நாள் உலகத்தமிழர் புலம்பெயர்ந்தோர் நாளாகக் கொண்டாடப்பட்டது. இலங்கையில் இருந்து தமிழகத்தை நோக்கி வந்த தமிழர்களுக்கு 317 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

நான் மிகக் கவனமாகத் தான், இது நம்முடைய அரசு என்று சொல்கிறேன். எனது அரசு என்றோ, திமுக அரசு என்றோ சொல்லவில்லை. ‘இது ஒரு கட்சியின் அரசாக இல்லாமல், ஓர் இனத்தின் அரசாக அமையும்’ என்று நான் சொல்லி இருக்கிறேன். சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவம், சகோதரத்துவம், மானுடப்பற்று, தமிழ் மொழிப்பற்று, இன உரிமைகள், கூட்டாட்சித் தத்துவம், மாநில சுயாட்சித் தத்துவங்களைக் கொண்ட திராவிட மாடல் அரசாக இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இத்தகைய திராவிடவியல் ஆட்சியியல் கோட்பாட்டை கடந்த 100 ஆண்டுகால திராவிட இயக்கத் தலைவர்கள் முன்னெடுத்த சமூக, பொருளாதார, அரசியல் கோட்பாடுகளின் அடிப்படையில் நான் வடிவமைத்திருக்கிறேன்.

சாதியால், மதத்தால் தமிழர்களைப் பிரிக்கும் சக்திகள் அதிகமாகி வரும் சூழலில் நாம் அனைவரும் ஒன்றுசேர்வதற்கு, நம்மை ஒருங்கிணைக்கும் ஆற்றல் தமிழ்மொழிக்கு மட்டும்தான் இருக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் - பல்லாயிரம் மைல் கடந்தும் இன்று நாம் ஒன்றாகக் கூடியிருக்கிறோம் என்றால், தமிழர் என்ற உணர்வோடு நாம் கூடி இருக்கிறோம். நம்மை நாடுகள் பிரிக்கலாம், நிலங்கள் பிரிக்கலாம், ஆனாலும், மொழி இணைக்கிறது. அந்த வல்லமை தமிழ்மொழிக்கு உண்டு.இவ்வாறு அவர் பேசினார். நம்மை நாடுகள் பிரிக்கலாம், நிலங்கள் பிரிக்கலாம், ஆனாலும், மொழி இணைக்கிறது. அந்த வல்லமை தமிழ்மொழிக்கு உண்டு.

Related Stories: