கோவை- மஞ்சூர் சாலையில் அரசு பஸ், தனியார் வாகனங்களை வழிமறித்த காட்டு யானை கூட்டம்: பயணிகள் பீதி

மஞ்சூர்: மஞ்சூர் அருகே அரசு பஸ் மற்றும் தனியார் வாகனத்தை காட்டு யானைகள் வழி மறித்ததால் பயணிகள் பீதி அடைந்தனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை. மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் உள்ள இப்பகுதியில் நீர் மின் நிலையம் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில தினங்களாக 2 குட்டிகளுடன் 5 காட்டு யானைகள் மந்து, கெத்தை, பெரும்பள்ளம் பகுதிகளில் சுற்றி திரிகின்றன. சாலைகளிலேயே யானைகள் நடமாடுவதால் இவ்வழியாக செல்லும் அரசு பஸ்கள், தனியார் வாகனங்களை யானைகள் வழிமறிப்பது வாடிக்கையாக உள்ளது.

நேற்று முன்தினம் சுமார் 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கோவையில் இருந்து மஞ்சூருக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இரவு 8 மணியளவில் கெத்தை அருகே வந்தபோது குட்டிகளுடன் காட்டு யானைகள் பஸ்சை வழிமறித்தபடி நடுரோட்டில் நின்றன. இதை  பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர் பஸ்சை மெதுவாக இயக்கி சாலையோரமாக ஒதுக்கி நிறுத்தினார். பயணிகள் அச்சம் அடைந்தனர். 45 நிமிடங்களுக்கு பிறகு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றன. நேற்று காலை மஞ்சூர் பகுதியில் இருந்து கோவைக்கு சென்ற தனியார் வாகனத்தையும் மந்து என்ற இடத்தில் யானைகள் வழிமறித்தன.

* யானைகள் நகரத்திற்குள் வருவதை தடுக்க அகழி, சோலார் மின்வேலி: அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

சேலம்: தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று சேலத்தில் அளித்த பேட்டி: சேயானைகள் காட்டுப்பகுதியில் இருந்து நகரத்திற்குள் வருகிறது. அதை ஊருக்குள் வராத வகையில் தடுக்க அகழி வெட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். சோலார் மின்வேலி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சொந்தமாக பொக்லைன் வாங்கி, அகழி வெட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுச்சூழலை மாசில் இருந்து காப்பாற்றும் வகையில் மரகத பூஞ்சோலை என்னும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரு கிராமத்தை தேர்வு செய்து ஒரு ஹெக்டேர் அளவில் தரிசு நிலத்தை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மரகத பூஞ்சோலை திட்டம் ஒரு மாவட்டத்தில் 3 இடங்களில் கொண்டு வரப்படும். இந்தாண்டு  2.50 கோடி மரம் நடுவதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதற்கான நாற்றுகள் தயாராகி வருகிறது. அனுமதியில்லாமல் மலைப்பகுதியில் கட்டிடம் கட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: