திருப்பதியில் போலி தரிசன டிக்கெட் சேலம் டூரிஸ்ட் நிறுவனத்தில் ஆந்திர போலீசார் விசாரணை

சேலம்: திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு போலியாக தரிசன டிக்கெட் வழங்கியதாக சேலத்தை சேர்ந்த டூரிஸ்ட் உரிமையாளரிடம் ஆந்திர போலீசார் விசாரணை நடத்தினர். ஆந்திர மாநிலம் திருப்பதியில் பிரசித்தி பெற்ற வெங்கடாஜலபதி கோயில் உள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து இந்த கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பல மணிநேரம் வரிசையில் நின்று ஏழுமலையானை தரிசனம் செய்து செல்கின்றனர். பக்தர்கள் தரிசனத்திற்கு கட்டண டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சேலத்தை சேர்ந்த ஒருவர் தரிசனம் செய்ய திருப்பதிக்கு கட்டண டிக்கெட் கொண்டு சென்றார். அங்கு அதனை பரிசோதித்தபோது அது போலி டிக்கெட் என்பது தெரியவந்தது. இதுகுறித்து, திருமலா காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து சேலத்தை சேர்ந்த அந்த பக்தரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், சேலம் 2வது அக்ரஹாரத்தில் உள்ள டூரிஸ்ட் அலுவலகத்தில் இருந்து தனக்கு இந்த கட்டண தரிசன டிக்கெட் கொடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து நேற்று திருமலா போலீசார் சேலம் வந்தனர். அவர்கள் 2வது அக்ரஹாரத்தில் உள்ள டூரிஸ்ட் அலுவலகத்தில் உரிமையாளரை பிடித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து இது குறித்து விசாரிக்க அவரை திருப்பதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

Related Stories: