கள்ளக்குறிச்சியில் ரூ.3 லட்சம் கடனுக்கு ரூ.1 கோடி கேட்டு மிரட்டியதால் பாஜ நிர்வாகி தற்கொலை: கந்து வட்டி கும்பலை பிடிக்க 3 தனிப்படை தீவிரம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ரூ.3 லட்சம் கடனுக்கு ரூ.10 லட்சம் கொடுத்த பிறகும், ரூ.1 கோடி கேட்டு கந்து வட்டிக்காரர்கள் மிரட்டியதால் பாஜக நிர்வாகி விஷம் குடித்துவிட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து கந்து வட்டி கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அண்ணா நகரை சேர்ந்தவர் செல்வம் மகன் திருவேங்கடம் (எ) தினேஷ் (21). கள்ளக்குறிச்சி பாஜ நகர இளைஞரணி துணை தலைவர். இவர் அதே பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் என்டர்பிரைசஸ் கடையில் கடந்த 5 ஆண்டுகளாக பணம் வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் 9 வீடியோ மற்றும் 1 ஆடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் வெளியிட்டு விட்டு தென்கீரனூர் கிராம எல்லை பகுதியில் கிணற்றில் குதித்து நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி போலீசார், தினேஷ் வெளியிட்டுள்ள வீடியோ மற்றும் ஆடியோவை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அந்த வீடியோவில், கடை உரிமையாளர் என்னை மன ரீதியாக துன்புறுத்தி வருகிறார். மேலும் தான் ஒருவரிடம் கடன் பெற்று இருந்தேன். இதற்காக வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கி மிரட்டியதால், ரூ.10 ஆயிரம் கடனுக்கு ரூ.7.50 லட்சமும், ரூ.3 லட்சம் கடனுக்கு ரூ.10 லட்சமும் செல்போன் பரிவர்த்தனை மூலம் கொடுத்துள்ளேன். இதற்கான ஆதாரம் டைரியில் உள்ளது. எனது வங்கி கணக்கிலும் ஆய்வு செய்யலாம். மீட்டர் வட்டிக்கு மேல் வசூல் செய்ததோடு ரூ.1 கோடி கேட்டு மிரட்டி வருகின்றனர்.

இதனால் என்னால் வாழ முடியாமல் மருந்து குடித்து ஒன்றரை மணி நேரம் ஆகிறது. தென்கீரனூர் கிராம பகுதியில் உள்ள கிணற்று அருகில் எனது பைக்கை நிறுத்தி உள்ளேன். நான் தற்போது கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள போகிறேன். அம்மா என்னை மன்னித்துவிடு, பாட்டி எனது அம்மா, தங்கச்சியை நன்றாக பார்த்துக்கொள் என அவர் கூறியுள்ளார். இதையடுத்து தினேஷை தற்கொலைக்கு தூண்டியதாக கள்ளக்குறிச்சி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மற்றும் பொரசக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் மற்றும் கந்துவட்டி கும்பல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இவர்களை பிடிக்க எஸ்.பி. செல்வகுமார் உத்தரவின் பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், தினேஷ் வீட்டில் உள்ள அவரது அறையை போலீசார் நேற்று ஆய்வு செய்து ஆவணங்கள் சிலவற்றை கைப்பற்றி உள்ளனர். இதேபோன்று அவரது வங்கிக் கணக்கில் இருந்து யார் யாருக்கெல்லாம் பணம் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்களையும் திரட்டி விசாரணை மேற்கொள்ள உள்ளனர். இச்சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: