பெண் கொலை வழக்கில் 196 நாட்களாகியும் குற்றவாளியை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறல்: செல்போன் பயன்படுத்தாதது காரணமா?

சென்னை: ஓட்டேரியில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் 196 நாட்களாகியும் குற்றவாளியை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். சென்னை ஓட்டேரி, ஏகாந்திபுரம், 4வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (46). பூந்தமல்லியில் உள்ள எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி வாணி (41). தம்பதிக்கு கவுதம் (15), ஹரிஷ் (12) என்ற மகன்கள் உள்ளனர். குடிப்பழக்கம் உள்ள ரமேஷ், அடிக்கடி குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20ம் தேதி, ரமேஷின் மகன்கள் 2 பேரும் அதே பகுதியில் உள்ள பாட்டி வீட்டில் இருந்துள்ளனர். அன்று இரவு 11 மணியளவில், தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ரமேஷ், தனது மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு, உடலை போர்வையால் சுருட்டி வீட்டில் உள்ள மேஜைக்கு கீழே பதுக்கிவிட்டு மாயமானார். 2 நாட்கள் கழித்து வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அக்கம் பக்கத்தினர் ஓட்டேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் வந்து பார்த்தபோது, வாணி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, கணவர் ரமேஷை தேடி வருகின்றனர். ஆனால், கொலை நடந்து 196 நாட்கள் ஆகியும் இதுவரை அவரை போலீசாரால் கைது செய்ய முடியவில்லை. ரமேஷ் வீட்டில் இருந்து செல்லும்போது அவரது செல்போனை எடுத்துச் செல்லவில்லை என்றும், அவருக்கு செல்போன் பயன்படுத்தும் பழக்கம் இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், அவர் எந்த பகுதியில் உள்ளார் என்பதை கண்டுபடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வழக்கமாக, குற்றம் நடக்கும் இடத்தில் பதிவான செல்போன் சிக்னலை வைத்து, குற்றவாளிகளை அடையாளம் கண்டு போலீசார் கைது செய்வர். ஆனால், இந்த வழக்கில் குற்றவாளி செல்போன் பயன்படுத்தாததால் அவரை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர் கூறுகையில், ‘‘முன்பெல்லாம் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு சப்-இன்ஸ்பெக்டரை நியமித்து அவர்கள் மக்களுடன் அதிகமான தொடர்பில் இருந்து வந்தனர். மக்களின் குறைகளை கேட்டறிந்து அதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கும், அரசுக்கும் தெரியப்படுத்தினர். இதனால், பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஒரு நல்ல நட்புறவு இருந்து வந்தது. ஊருக்குள் நடைபெறும் விரும்பத்தகாத விஷயங்களை ஊர் பெரியவர்கள் குறிப்பிட்ட அந்த சப்-இன்ஸ்பெக்டரிடம் கூறி முன்கூட்டியே தவறு நடப்பதை தடுத்து வந்தனர். நாளடைவில் அந்த பழக்கம் மாறி, தற்போது வேலை செய்வதற்கே ஆட்கள் பற்றாக்குறை உள்ளது.

குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் காலை, மாலை, இரவு என 3 வேலைகளும் சுழற்சி முறையில் ஆட்கள் வந்தாலும் போலீசார் பற்றாக்குறை என்பது தொடர்ந்து இருந்த வண்ணம் உள்ளது. மேலும், வேலைக்கு வரும் போலீசாரில் பாதி பேர் பாதுகாப்பு மற்றும் அயல் பணிக்கு சென்று விடுகின்றனர். மேலும் தொடர்ச்சியாக சில வழக்குகளை பின்தொடர முடியாத காரணத்தினால் நிலுவையில் இருந்து வருகிறது.

செல்போன் பயன்பாடு வந்தநாள் முதல் போலீசாரின் புலனாய்வு திறன் சற்று குறைந்து விட்டதாகவே தெரிகிறது. குறிப்பாக இளைய தலைமுறை போலீசார் நெட்வொர்க் எனப்படும் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்வெஸ்டிகேஷன் எனப்படும் புலனாய்வு திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியம். ஓட்டேரி சம்பவத்தில், கொலையாளியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர் வெளி மாநிலத்தில் பதுங்கி உள்ளதாக தெரிய வந்துள்ளது. விரைவில் அவரை கைது செய்வோம்,’’ என்றார்.

Related Stories: