வரும் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு உறுதி பணம் கொடுப்பதாக மீண்டும் சொன்னால் டி.டி.வி.தினகரன் மீது வழக்கு: மாஜி அமைச்சர் கே.பி.முனுசாமி பேட்டி

வேலூர்: வரும் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடப்பது உறுதி. பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பணம் கொடுப்பதாக மீண்டும் சொன்னால் டிடிவி.தினகரன் மீது வழக்கு தொடரப்படும் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறினார்.

வேலூரில்  முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நேற்று வேலூர் மத்திய சிறைக்கு சென்று அப்புவை சந்தித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி வரும் 11ம் தேதி நடைபெறும். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக உறுதியாக தேர்வு செய்யப்படுவார். எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களுக்கு பணம் கொடுப்பதாக வைத்திலிங்கம் சொல்வது வேதனையானது. அவர் விரக்தியின் எல்லையில் இருக்கிறார்.

ஏன் டிடிவி தினகரனும் ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.5 கோடி வரை பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கொடுத்துள்ளதாக சொல்லியிருக்கிறார். அவர்களுக்கு எச்சரிக்கையாக சொல்கிறேன். இவர்கள் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்கள். ஆட்சியில் பொறுப்பு வகித்தவர்கள். அப்படிப்பட்ட இவர்கள் ஒரு தொண்டன் மீது அபாண்டமான குற்றச்சாட்டை பதிவு செய்வது வேதனையானது. அதுவும் வைத்திலிங்கம் சொல்வது வேதனையானது. காரணம் அவருடன் நாங்கள் ஒன்றாக பயணித்தவர்கள். டிடிவி தினகரன் மீண்டும் இதுபோன்று சொன்னால் அவர் மீது வழக்கு தொடரப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

* வழக்கை சந்திக்க தயார் டிடிவி தினகரன் பதிலடி

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட அமமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்ட அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பேட்டி: நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ரூ.25 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை பணப் பட்டுவாடா நடந்ததாக பொதுமக்கள் பேசுகின்றனர். இதை நான் தஞ்சாவூரில் தெரிவித்தேன். பண பட்டுவாடா குறித்து மீண்டும் பேசினால், மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்று கே.பி.முனுசாமி கூறியுள்ளார். பணம் பட்டுவாடா குறித்து நான் கண்ணில் பார்க்கவில்லை. பொதுமக்கள், கட்சியினர் பேசியதைத்தான் நான் கூறினேன். துரோகிகள் கூட்டம் அழிவை சந்திக்கும் காலம் வந்து விட்டது. கொடநாடு கொலை வழக்கில், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: