சென்னைக்கு கூரியர் மூலம் அபின் கடத்திய வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

சென்னை:  மதுரையில் இருந்து சென்னைக்கு, கூரியர் வாயிலாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக கடந்த 2017ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி, வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தகவல் தந்தவர் கொடுத்த முகவரிக்கு அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர்.

 

அப்போது, அங்கு இருந்த பார்சலில் 940 கிராம் எடையுள்ள அபின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பழனி, (35) என்பவருக்கு கூரியர் மூலம் மதுரையில் இருந்து பேசுமணி என்ற பெயரில் அபினை பார்சலில் அனுப்பியது தெரியவந்தது.  இதையடுத்து, அபினை பறிமுதல் செய்த அதிகாரிகள் பழனி மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு, சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு 1வது கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜூலியட் புஷ்பா முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.பி.குமார், வழக்கறிஞர் ஏ.செல்லத்துரை ஆகியோர் ஆஜராகினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, ‘ சமீபகாலமாக, போதைப்பொருள் பழக்கத்தால் அப்பாவி இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். போதைப்பொருளை கையாளும் நபர்கள், அப்பாவி இளைஞர்களின் மரணத்திற்கான கருவியாகவும் உள்ளனர்.

இது, சமூகத்தில் மோசமான, தீய விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பழனி மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளால் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது’’ என்று கூறியுள்ளார்.

Related Stories: