மஞ்சள் நிறத்தில் வந்த குடிநீரை குடித்த தாய், மகன் பரிதாப பலி: 20க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே குருவிமலை ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர்.நகர், கலைஞர் நகர், முருகன் கோயில் தெரு, அம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு என உடல் நலகுறைவு ஏற்பட்டுள்ளது. இதில், பலர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜம்மாள் என்ற மூதாட்டி சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ராஜம்மாளின் மகன் (பட்டு நெசவாளர்) குமார் என்பவரும் உயிரிழந்தார். வயிற்றுப்போக்கு காரணமாக அடுத்தடுத்து இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடிநீர்காக பாலாற்றில் ஆழ்துளை அமைக்கப்பட்டது. அதிக ஆழம் ஆழ்துளை போடாமல் குறைந்த அளவில் 7 அடி மட்டுமே போர் போடப்பட்டதின் எதிரொலியாக தான் தண்ணீர் தரம் மாறியுள்ளது. குடி தண்ணீர் மஞ்சள் நிறத்தில் வந்தது. இந்த தண்ணீர் குடித்ததால் மட்டும் தான் பலர்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்க்கு வந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உடல்நல குறைவு ஏற்பட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். சுகாதாரதுறை சார்பில் மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு அகற்றப்பட்டு புதிய இடத்தில் இருந்து குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அருகில் பாலாறு இருந்தும் பாலாற்று தண்ணீர் குடிக்க முடிய்வில்லை. பணம் கொடுத்து வாங்கி குடிநீர் குடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரத்தில் காலரா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதா என அச்சத்தில் உள்ளனர். கடந்த பத்து நாட்களுக்கு மேலாக உடலநலக்குறைவு ஏற்பட்டுள்ளது. வயிற்றுப்போக்கு நிறுத்த தற்போது வரை சுகாதாரதுறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் உயிரிழப்பு ஏற்படாமல் இருக்க துரித நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரதுறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசிய போது தினமும் மருத்துவமுகாம் அமைத்து போதிய சிகிச்சை கொடுத்து வருவதாகவும் மூதாட்டி ராஜம்மாள் வயது முதிர்வு காரணமாகவும் அவரது மகன் குமார் பக்கவாதம் மற்றும் மூளையில் பிரச்னை இந்ததின் காரணமாக உயிரிழந்ததாக இறப்பு சான்றிதழில் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

Related Stories: