தேவாத்தூர் ஊராட்சியில் சுற்று சுவர் இல்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய ஆதிதிராவிடர் நடுநிலை பள்ளி; குளம் அருகில் இருப்பதால் பெற்றோர் அச்சம்: அசம்பாவிதம் நடப்பதற்கு முன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

செய்யூர்: தேவாத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நடுநிலை பள்ளியின் பின்புறம் சுற்று சுவர் அமைக்கப்படாததால் சமூக விரோதிகளில் கூடாரமாக பள்ளி வளாகம் மாறியுள்ளது. மேலும், பள்ளிக்கு அருகில் குள் உள்ளதால் குழந்தைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்ப அஞ்சுகின்றனர். எனவே, அசம்பாவிதம் சம்பவம் நடப்பதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்தில் தேவத்தூர் ஊராட்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை செயல்படும் பள்ளியில் 90க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியை சுற்றி பல ஆண்டு காலமாக சுற்றுசுவர் அமைக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், கடந்த 3 வருடங்களுக்கு முன் பள்ளியின் முன்புறம் மற்றும் இடது வலது புறங்களில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. ஆனால், சுற்றுச்சூழல் முழுமையாக கட்ட போதிய நிதி ஒதுக்கப்படாததால் பள்ளியின் பின்புறம் மட்டும் சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை.  இந்தப் பள்ளியின் பின்புறம் ஒட்டி பெரிய குளம் மற்றும் ஏரி அமைந்துள்ளது. இதனால், பள்ளி இடைவேளை நேரங்களில் மாணவர்கள் குளத்தின் அருகே சென்று விளையாடுகின்றனர்.

அப்போது, அசம்பாவிதம் நேரிடும் நிலை உருவாகியுள்ளது. மேலும், சுற்றுச்சுவர் அமைக்கப்படாத வழியாக இரவு நேரங்களில் சமூக விரோதிகள் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து மது அருந்துவது உள்பட பல்வேறு தீய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மது அருந்தும் குடிமகன்கள் பள்ளி வளாகத்திலேயே மதுபான கழிவுகளை விட்டு செல்வதால் மறுநாள் காலை பள்ளி மாணவர்கள் அக்கழிவுகளை அகற்றும் அவலநிலை உள்ளது. எனவே, பள்ளி மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளியின் பின்புறம் சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டுமென மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: