கருங்குழியில் 5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ரயில்வே மேம்பால பணி: விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மதுராந்தகம்: கருங்குழியில் சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ரயில்வே மேம்பால பணி கிடப்பில் போடப்பட்டதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த கருங்குழியில் சென்னை - திருச்சி ரயில் பாதை அமைந்துள்ளது. இந்த வழியாக சென்னையில் இருந்து, பாண்டிச்சேரி, விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கேரளா உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக, இந்த பாதையில் அவ்வப்போது ரயில்கள் சென்று வருகின்றன. அப்போது, கருங்குழி பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவது வழக்கம்.

இதனால், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய கருங்குழி பகுதியில் இருந்து கினார், ஏறுவாக்கம், திருக்கழுக்குன்றம், கே.கே.புதூர், இருசாமநல்லூர், தச்சூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் லாரிகள், பஸ்கள் போன்றவை நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. மேலும் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் ரயில் கடக்கும்போது கேட் மூடப்படும். இதனால், மாணவர்கள், வேலைக்கு செல்வோர் தாமதமாக சென்று வருகின்றனர்.

இதனை தவிர்க்க அப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ₹ 21 கோடியில் தொடங்கியது. ரயில்வே துறையினர் மேம்பாலத்தை கட்டி முடித்தனர். அப்போதைய, மாநில அரசு மேம்பாலம் கட்டுவதற்கான இடத்தின் நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகையை வழங்கவில்லை. இதனால், மேம்பாலம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டதற்கு காரணம் என பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மேம்பால பணிகள் விரைந்து முடிந்தால், இப்பகுதி பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் நிரந்தி தீர்வு கிடைக்கும் என நினைத்த மக்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மேம்பாலத்தினை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: