ஓலா காரின் ஓ.டி.பி. எண் சொல்லாததால் குடும்பத்தினர் கண்முன் இன்ஜினியர் அடித்து கொலை: டிரைவர் கைது

சென்னை: ஓலா காரின் ஓடிபி எண்ணை சொல்லாத இன்ஜினியரை, அவரது குடும்பத்தினர் கண்முன்னே அடித்து கொன்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி குந்தன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் உமேந்தர் (33). கோயம்புத்தூர் தகவல் தொழில் நுட்ப பூங்காவில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பவ்யா (30) பல் மருத்துவம் படித்து விட்டு ஆன்லைனில் மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் பணியில் உள்ளார். பவ்யா தனது இரு குழந்தைகளுடன் கன்னிவாக்கம் கிராமத்தில் வசித்து வருகிறார்.

இன்ஜினியர் உமேந்தர், வாரந்தோறும் சனிக்கிழமையன்று வீட்டிற்கு வந்து குடும்பத்துடன் இருந்து விட்டு ஞாயிறு இரவு மீண்டும் கோயம்புத்தூர் சென்றுவிடுவதை வாடிக்கையாக வைத்து இருந்தார். இதுபோல, கடந்த வாரம் சனிக்கிழமை உமேந்தர் தனது வீட்டில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் ஞாயிறு அன்று மாலை சினிமா பார்ப்பதற்காக கன்னிவாக்கம் கிராமத்தில் இருந்து ஓலா கார் மூலம் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு மனைவி பவ்யா (30), குழந்தைகள் அக்ரேஷ், லியா, பவ்யாவின் சகோதரி தேவிப்பிரியா மற்றும் அவரது குழந்தைகளான கருண், லேசியா ஆகிய 7 பேரும் வந்தனர். படம் பார்த்து விட்டு வீடு திரும்புவதற்காக தேவிப்பிரியாவின் செல்போனில் இருந்து ஓலா கார் புக்கிங் செய்தனர். சிறிது நேரத்தில் இன்னோவா கார் வந்ததும் அனைவரும் காரில் ஏறினர்.

காரின் டிரைவர் ரவி என்பவர் புக்கிங் செய்ததற்கான ஓ.டி.பி எண்ணை கேட்டுள்ளார். தேவிப்பிரியா, ஓலா ஆப்பில் ஓடிபி பார்க்காமல் தனது செல்போனில் உள்ள மெசேஜ் இன்பாக்சில் ஓ.டி.பி.யை தேடியுள்ளார். இதனால் கோபமடைந்த கார் டிரைவர் ஓ.டி.பி. வரவில்லை என்றால் காரை விட்டு இறங்கச் சொன்னார். அதற்கு, காரில் இருந்துஇறங்க முடியாது என்று உமேந்தரும் உடன் வந்தவர்களும் தெரிவித்துள்ளனர். இதனால், உமேந்தர் தரப்புக்கும் டிரைவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் காரை விட்டு இறங்கிய உமேந்தர் காரின் கதவை வேகமாக சாத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார் டிரைவர் ரவி, ‘ என்னுடைய கார் கதவை ஏன் வேகமாக சாத்தினாய்? என்று கேட்டு உமேந்தரை சரமாரியாக தாக்கினார். இதை பார்த்த மனைவி உள்பட உறவினர்கள் டிரைவரை தடுத்தும், அவர்களை தள்ளிவிட்டு உமேந்தரை கீழே தள்ளி அவர் உடல் மீது ஏறி மீண்டும் கையால் குத்தியுள்ளார்.  இதில் மயக்கமடைந்த உமேந்தரைப் பார்த்து அவரது மனைவி மற்றும் குழந்தைகளும், உறவினரும் கூச்சல் போட்டனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் வந்து உமேந்தரை மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தப்பி ஓட முயன்ற ஓலா கார் டிரைவர் ரவியை பிடித்து போலீசுக்கு தகவல் அளித்தனர். கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், எஸ்.ஐ. தமிழன்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஓலா கார் டிரைவர் ரவியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனிடையே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட உமேந்தரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அவரது மனைவி, குழந்தைகள், உறவினர்கள் கதறி அழுதனர். இதைத் தொடர்ந்து கேளம்பாக்கம் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து ஓலா கார் டிரைவர் சேலம் அடுத்த ஆத்தூர், வ.உ.சி. நகரைச் சேர்ந்த ரவி (41) என்பவரை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

* ஆத்திரம் கண்ணை மறைத்ததால் கொலை

பயணியை தாக்கிய ஓலா கார் டிரைவர் ரவி தனது குடும்பத்தை சேலம் மாவட்டம், ஆத்தூரில் விட்டு விட்டு சக கார் ஓட்டுனர் ஒருவருடன் பரங்கி மலையில் வசித்து வந்துள்ளார். குடும்பத்துடன் இல்லாமல் தனியாக வசித்து வந்ததால் தினமும் குடிப்பாராம். சம்பவத்தன்று ஓலாவை புக் செய்த உமேந்தர் ஓ.டி.பி.யை தனது செல்போனில் தேடி பார்த்து சொல்லத் தெரியாமல் தடுமாறி உள்ளார். ஆனால், காரை புக்கிங் செய்தது அவரது மனைவியின் சகோதரி யான தேவிப்பிரியாவின் செல்போனில் என்பது பிறகு தெரிந்து அதில் ஓ.டி.பி.யை தேடி சொல்வதற்குள் டிரைவரின் ஆத்திரமான சொற்கள் உமேந்தரை கோபப்படுத்தி காரை விட்டு இறங்கி கதவை வேகமாக சாத்தி உள்ளார்.

இதனால் வாக்குவாதம் ஏற்பட்டபோது உமேந்தர் தனது கையில் இருந்த தண்ணீர் பாட்டிலால் டிரைவர் ரவியை தாக்கி உள்ளார். அப்போது, ரவி தனது செல்போனால் தடுத்துள்ளார். அந்த செல்போன் உமேந்தரின் நெற்றிப்பொட்டில் வேகமாகப் பட்டுள்ளது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த உமேந்தரின் பின்னந்தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் டிரைவர் ரவியை பிடித்து தங்கள் கையில் இருந்த தண்ணீர் பாட்டில், கூல்டிரிங்ஸ் பாட்டில் போன்றவற்றால் சரமாரியாக தாக்கி உள்ளனர். கண நேர ஆத்திரம் கண்ணை மறைத்ததால் இந்த கொலை நடந்துள்ளது என போலீசார் தெரிவிக்கின்றனர்.

* ஓலா நிர்வாகத்தினால் மன உளைச்சலில் இருந்தாரா டிரைவர்

சில மாதங்களாக ஓலா நிறுவனத்தில் காரை ஓட்டும் டிரைவர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. ஒரு புக்கிங் கேன்சல் செய்யப்பட்டாலும் டிரைவருக்கு 50 ரூபாயும், பயணிக்கு 50 ரூபாயும் அடுத்த புக்கிங்கில் பிடித்தம் செய்யப்படுகிறது. மேலும், டிரைவரின் செயல்பாடு குறித்து ஸ்டார் ரேங்கிங் சிஸ்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் குறைந்த ரேங்கிங் பெற்றால் அந்த டிரைவருக்கு கணிசமாக தொகை குறைக்கப் படுகிறது. கூடுதல் வருமானத்திற்காக இரவு, பகல் பாராமல் வாகனங்களை இயக்குவதாலும் ஓட்டுனர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே, 8 முதல் 10 மணி நேரம் காரை ஓட்டிய டிரைவர்களுக்கு மேலும் புக்கிங் தரக்கூடாது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். குடும்பத்துடன் இல்லாமல் தனியாக வசிக்கும் டிரைவர்கள் மன அழுத்ததால் இதுபோன்ற செயலில் ஈடுபடுவதாகவும் கூறினர். குடும்பத்தினரை தள்ளிவிட்டு

உமேந்தரை கீழே தள்ளி அவர் உடல் மீது ஏறி மீண்டும் கையால் குத்தியுள்ளார். இதில் மயக்கமடைந்த உமேந்தர், பின்னர் இறந்தார்.

Related Stories: