அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் எடப்பாடி மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கை கடந்த மாதம் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ‘அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடத்தலாம். ஆனால், தீர்மானம் தொடர்பாக எந்தவொரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க இயலாது. மேலும், தீர்மானங்களை நிறைவேற்றவோ, புதிய தீர்மானங்களை கொண்டு வரவோ தடையில்லை’ என உத்தரவிட்டு பொதுக்குழுவு கூட்டத்துக்கு தடைக்கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து மேற்கண்ட தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நள்ளிரவு வரையில் விசாரித்த உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கி அமர்வு வழங்கிய உத்தரவில், ‘அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம். ஆனால் மனுதாரர் தரப்பில் வைக்கப்பட்டுள்ள 23 தீர்மானங்களை மட்டுமே ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். இருப்பினும் மற்ற புதிய தீர்மானங்கள் குறித்து ஆலோசித்தாலும் அதுகுறித்த எந்த முடிவையும் எடுக்கக் கூடாது’ என தனது உத்தரவில் தெரிவித்து இருந்தார்.

ஆனால், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி தரப்பில், புதிய தீர்மானங்கள் குறித்து முடிவெடுக்கலாம். ஆனால் அமல்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும் என கேட்டனர். ஆனால், நீதிபதிகள் அந்த கோரிக்கையை நிராகரித்து விட்டனர். இந்த உத்தரவானது ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக அமைந்தது. இருப்பினும் இதையடுத்து கடந்த 23ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானமும் நிராகரிக்கப்பட்டதால் கூட்டத்தின் பாதியிலேயே ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறினர். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக ஓ.பி.எஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் மேற்கண்ட சென்னை உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வின் உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் கடந்த 28ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இதேபோன்று எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான நத்தம் விஸ்வநாதன் மற்றும் பெஞ்சமின் தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படிருந்தது. அதில், ‘அதிமுகவில் நடப்பது உட்கட்சி விவகாரம் என்பதால் இதில் நீதிமன்றம் தலையிட்டு எந்த உத்தரவையும் பிறப்பிக்க அதிகாரம் இல்லை. அதனால் அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர வேறு எதனையும் நிறைவேற்றக் கூடாது என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன் மற்றும் பாலாஜி சீனிவாசன் ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் ஒரு கோரிக்கை வைத்தனர். அதில், ‘அதிமுக பொதுக்குழு தொடர்பான விவகாரத்தில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும்.

ஏனெனில் வரும் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் மீண்டும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் எந்தவித குழப்பமும் ஏற்பட்டு விடக்கூடாது’ என தெரிவித்தார்.

ஆனால், அப்போது கேவியட் மனுதாரரான ஓ.பன்னீர்செல்வத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘மேல்முறையீட்டு மனுக்களை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. கோடை விடுமுறைக்கு பிறகு விசாரிக்கலாம்’ என தெரிவித்தார். இதையடுத்து இருதரப்பு கோரிக்கைகளையும் பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவின் ஒப்புதல் பெற்று வரும் 6ம் தேதி, அதாவது புதன்கிழமை விசாரிப்பதாக உத்தரவிட்டார்.

* அதிமுக பொதுக்குழுவில் அடியாட்கள் மயம்: மருது அழகுராஜ் குற்றச்சாட்டு

சென்னை: அதிமுக பொதுக்குழுவில் எங்கு பார்த்தாலும் அடியாட்கள் மயமாக தான் இருந்தது என முன்னாள் செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இரட்டை தலைமை தொண்டர்களால் ஏற்கப்பட்டுள்ளது என்பது தான் எங்களுடைய நம்பிக்கை. 4 ஆண்டுகால ஆட்சி நடத்தும்போது விக்கிரவாண்டி, நாங்குநேரியில் 100 சதவீத வெற்றியை பெற்றார்கள். உட்கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு அனைத்தும் அமைதியாக நடந்து முடிந்தது. இந்தநிலையில், பொதுக்குழு தீர்மானங்களை இயற்றக்கூடிய குழுவில் நானும் இடம்பெற்றேன். 23 தீர்மானங்கள் எழுதப்பட்டது. இதை இறுதி செய்துகொடுத்தேன். அந்த 23 தீர்மானங்களில் ஒரு தீர்மானம் தான் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருதை தர வேண்டும் என்ற கோரிக்கை. முதலில் இருவரும் ஒப்புதல் கொடுத்தார்கள். எங்களை இருவரும் அழைத்தார்கள்.

ஜெயலலிதா இருக்கும்போது பொதுக்குழு கண்ணியமாக நடக்கும். 18 வருடங்களாக அதிமுகவிற்காக உழைத்துள்ளேன். ஆனால், இந்தமுறை பொதுக்குழுவில் அடியாட்கள் மயமாக தான் இருந்தது. உள்ளே செல்லும்போது பதிவு இல்லை என்றார்கள். அப்போதே எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன்படி தான் திட்டமிட்டு திரட்டப்பட்டிருந்த கூட்டத்தின் கண்களில் ஆவேசம் தென்பட்டது. அப்போது, ஒருங்கிணைப்பாளரை தகாத வார்த்தைகளால் திட்டினர். அதை கேட்டு அதிர்ந்துபோனேன். பொதுச்செயலாளர் இருக்கையை ஜெயலலிதாவிற்காக நிரந்தரமாக விட்டுவைத்திருக்கிறோம் என்று சொன்னீர்கள். ஒருங்கிணைப்பாளர்கள் என்ற முறையிலேயே வழிநடத்துவோம் என்று உத்தரவாதம் கொடுத்தீர்கள். ஆனால், ஏன் இந்த திடீர் மாற்றம் ஏற்பட்டது என தெரியவில்லை.

இந்தியாவிலேயே ஒரு கட்சியின் பொதுக்குழு அரை மணி நேரத்தில் நடந்து முடிந்தது என்றால் அது அதிமுக பொதுக்குழு தான். ஒரு பொதுக்குழு செயற்குழுவை நேரலை செய்தது இந்தியாவிலேயே கிடையாது. ஏதோ திட்டத்தோடு நடத்தப்பட்ட பொதுக்குழுவில் ஓபிஎஸ் திட்டமிட்டு அவமானப்படுத்தப்பட்டார். ஆனால், இதை எதிர்த்து எடப்பாடி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. எனவே, தான் தொண்டர்கள் மட்டுமே அதிமுக தலைவரை தேர்வு செய்ய முடியும். செயற்குழுவோ, பொதுக்குழுவோ தேர்வு செய்ய முடியாது என்ற கழக விதியை எம்.ஜி.ஆர் கொண்டுவந்தார். தொண்டர்கள் தான் தலைவரை தீர்மானிக்க வேண்டும். மாவட்ட செயலாளர்கள் தலைவரை தேர்வு செய்ய முடியாது. நில அபகரிப்பு நடப்பது போல் அதிமுகவில் அரசியல் அபகரிப்பு கொடுமை இருக்கிறது. இதனை நாங்கள் ஏற்க மாட்டோம். இவ்வாறு கூறினார்.

Related Stories: