பல்கலை. வேந்தர் ஆளுநர்தான் மாநில அரசுகள் பின்பற்றணும்: ஒன்றிய கல்வி அமைச்சர் பேட்டி

புதுடெல்லி: ‘மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர்கள் செயல்படும் நடைமுறையை மாநில அரசுகள் கடைபிடிக்க வேண்டும்’ என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்கு பதிலாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி செயல்படுவார் என்று சட்டப்பேரவையில் மசோதோ நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதற்கிடையே, ஒரு பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தரை அம்மாநில ஆளுநர் நியமித்தார். இதற்கு, முதல்வர் மம்தா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதேபோல், தமிழகத்திலும் பல்கலைக்கழகங்களில் வேந்தராக ஆளுநரின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு, சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார்.

இந்நிலையில், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று ஐதாராபாத்தில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர்கள் செயல்படும் நடைமுறையை மாநில அரசுகள் கடைபிடிக்க வேண்டும். கல்வி என்பது மிகவும் அத்தியாவசியமானது. அதற்கு பல்வேறு பங்குதாரர்கள் உள்ளனர். ஒன்றிய பல்கலைக்கழகங்களுக்கு ஜனாதிபதி வேந்தராகவும், மாநில பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் வேந்தராகவும் செயல்பட வேண்டும். இது ஒரு சரியான மற்றும் நன்கு சோதிக்கப்பட்ட ஏற்பாடு. எனவே, மாநில அரசுகள் அதைக் கடைப்பிடிக்க வேண்டும். அவர்கள் சில அரசியல் பிரச்னைகளை உருவாக்க விரும்புகிறார்கள். இது துரதிர்ஷ்டவசமானது’’ என்றார்.

Related Stories: