மோடி பிரதமரான பின் கவிழ்க்கப்பட்ட ஆட்சிகள்

உத்தரகாண்டில் 50 ‘சி’ வரை பேரம்: 2016ம் ஆண்டு உத்தரகாண்டில் ஹரிஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, அரசுக்கு எதிராக 9 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். இதை பயன்படுத்தி பாஜ அரசு அமைக்க தூண்டில் போட்டது. இதற்காக 50 ‘சி’ பாஜ தருவதாக தங்களிடம் பேரம் பேசியதாக 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பகிரங்க குற்றச்சாட்டை தெரிவித்தனர். இந்நிலையில், போர்க்கொடி தூக்கிய 9 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு வழங்காமல் ஆட்சி கவிழ்க்க ஆளுநர் பரிந்துரைத்தார். இதையேற்று ஆட்சி கவிழ்க்கப்பட்டு, குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம், ‘குடியரசு தலைவர் ஆட்சி ரத்து செய்யப்பட்டு, ஹரிஷ் ராவத் ஆட்சி கலைக்கப்பட்டது செல்லாது’ என்று தெரிவித்தது. உச்ச நீதிமன்றமும் இதை உறுதி செய்தது. இதையடுத்து, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்து முதல்வராக பதவியேற்றார் ஹரிஷ் ராவத்.

பீகாரில் தேர்தல் முறைகேடு: பீகாரில் 2015ம் நடந்த சட்டமன்ற தேர்தல் வெற்றி பெற்று ராஷ்டிரிய ஜனதாதளமும், ஐக்கிய ஜனதா தளமும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. நிதிஷ் குமார் முதல்வராகவும், தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். 2 ஆண்டுகள் நன்றாக சென்ற அரசில் திடீர் பிளவு ஏற்பட்டது. முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் ராஜினாமா செய்தார். இதையடுத்து, பாஜ தனது சித்து விளையாட்டை தொடங்கியது. சில நாட்களிலேயே பாஜவுக்கு ஆதரவாக மாறினார் நிதிஷ் குமார். பின்னர், பாஜவுடன் சேர்ந்து நிதிஷ் குமார் கூட்டணி ஆட்சி அமைத்தார். முதல்வராக நிதிஷ் குமாரும், துணை முதல்வராக பாஜவை சேர்ந்த சுஷிலும் பதவியேற்றனர். ஆனால், அடுத்து வந்த தேர்தலில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் தான் அதிக இடங்களை பிடித்தது. இருப்பினும், பாஜவின் ராஜதந்திரத்தால் மீண்டும் நிதிஷ் குமார்-பாஜ கூட்டணி ஆட்சி அமைந்தது. கடைசி நேரத்தில் பாஜ முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டினார்.

ஒவ்வொருவராக பிடித்து மணிப்பூரில் பாஜ ஆட்சி: 2017ம் ஆண்டு மணிப்பூரில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 28 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியே தனி பெரும்பான்மை பெற்றது. கோவாவில் அரங்கேற்றப்பட்ட நாடகத்தை மணிப்பூரில் நடத்தி காட்டியது பாஜ. 21 இடங்களை மட்டுமே கைப்பற்றிய பாஜ, சிறிய கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயன்றது. முதலில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் பாஜவில் இணைந்தார். பின்னர், நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் முன்னணி, திரிணாமுல், லோக் ஜனசக்தி, சுயேட்சை என மொத்தம் 7 எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சி அமைத்தது. இதையடுத்து, 7 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அக்கட்சியில் இருந்து விலகி பாஜவில் இணைந்தனர்.

அருணாச்சலில் ஒரே நபர் 3 கட்சிகளின் முதல்வர்: அருணாச்சல் பிரதேசத்தில் 2011ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் 44 இடங்களில் வென்று வலுவான ஆளும்கட்சியாக காங்கிரஸ் இருந்தது. ஆனால், 5 ஆண்டுகள் நிறைவு பெறும் சூழலில் 2016ல் காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டது. காங்கிரசின் மூத்த தலைவரான கலிகோ புல், 21 எம்எல்ஏக்களுடன் கட்சியில் இருந்து விலகினார். பின்னர், 13 பாஜ எம்எல்ஏக்களுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். கவர்னர் ஆட்சி அமைக்க அனுமதி அளித்த பின் அருணாச்சல் பிரதேச முதல்வராக கலிகோ புல் பதவியேற்றார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘காங்கிரஸ் ஆட்சியை கலைத்தது செல்லாது’ என தீர்ப்பு அளித்தது. இதையடுத்து, காங்கிரஸ் சார்பில் பெமா காண்டு முதல்வராக பதவியேற்றார். ஆனால், 3 மாதங்களில் பெமா காண்டு உட்பட அனைவரும் கூண்டோடு காங்கிரசில் இருந்து விலகி, அருணாச்சல் மக்கள் கட்சியில் இணைந்தனர். அருணாச்சல் மக்கள் கட்சியின் முதல்வராக பெமா காண்டு மீண்டும் பதவியேற்றார். அடுத்த மூன்று மாதங்களில் முதல்வர் பெமா காண்டு தலைமையிலான எம்எல்ஏக்கள், பாஜவில் இணைந்தனர். இதையடுத்து, முதல்வர் பெமா காண்டு தலைமையில் பாஜ அரசு அமைந்தது. இதன் மூலம் ஒரே ஆண்டில் 3 கட்சிகள் சார்பில் ஒருவரே முதல்வரான கேலி கூத்து அரங்கேறியது. காங்கிரசில் இருந்து விலகி பாஜ ஆதரவுடன் முதல்வரான கலிகோ புல், முதல்வர் பதவியை இழந்த சோகத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

கோவாவில் கையில் வடை இருந்தும் சாப்பிட முடியல: கோவாவில் 2017ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்த உள்ள 40 தொகுதிகளில் 17 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் தனிபெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், ஆட்சி அமைக்க உரிமை கோர காங்கிரஸ் தாமதப்படுத்தியது. இதையடுத்து, ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கரை கோவாவுக்கு அனுப்பியது பாஜ. 13 பாஜ எம்எம்ஏக்கள் மட்டும் இருந்த சூழல், மனோகர் பாரிக்கர் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், தனி பெரும் கட்சியான காங்கிரசுக்கு அழைப்பு விடுக்காமல், பாஜவை ஆட்சி அமைக்க அழைத்தார் ஆளுநர். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் 10 எம்எல்ஏக்களை இழுத்து பாஜ ஆட்சி அமைத்தது. இதில் 3 காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கியது.

ஒன்றிய அமைச்சர் பதவி கொடுத்து ம.பி.யில் காங்கிரஸ் ஆட்சி க்ளோஸ்: மத்திய பிரதேசத்தில் முதல்வராக கமல்நாத் தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இந்நிலையில், காங்கிரசின் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியாவை தன்பக்கம் இழுத்தது பாஜ. அவருக்கு ஆதரவு தெரிவித்து 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால், காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்தது. இதையடுத்து, பாஜ ஆட்சி அமைத்தது. ஆனால், ஜோதிராதித்ய சிந்தியா முதல்வராகவில்லை. சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக பதவியேற்றார். சில மாதங்களில் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ஒன்றிய விமான போக்குவரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

ஜீரோவாக இருந்தாலும் சிக்கிமில் ஹீரோதான்: ஒற்றை இலக்க தனி பெரும் தொகுதிகளில் வென்று ஆட்சி பிடிக்காத மாநிலத்தில் அரியணையில் ஏறிய பாஜ, ஒரு தொகுதிகளில் வெற்றி பெறாத மாநிலத்தில் கூட ஆட்சி அமைத்து சாதித்து உள்ளது. 2019ம் நடந்த சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலில், மொத்தமுள்ள 32 தொகுதிகளில் பாஜ ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 17 தொகுதிகளிலும், சிக்கம் ஜனநாயக கூட்டணி 15 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதையடுத்து, சிக்கிம் ஜனநாயக கூட்டணியின் 10 எம்எல்ஏக்களை தனது பக்கம் இழுத்து, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவுடன் இணைந்து பாஜ ஆட்சி அமைத்தது.

புதுச்சேரியில் ரிமோட் கண்ட்ரோல் அரசு: புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. 5 ஆண்டுகள் ஆட்சி முடிவடைய 3 மாதங்களே இருந்த நிலையில், 2 அமைச்சர்கள் மற்றும் 6 எம்எல்ஏக்கள் நாராயணசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதனால், ஆட்சி கவிழ்ந்தது. போர்க்கொடி தூக்கிய அனைவரும் பாஜவில் இணைந்து சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தனர். இத்தேர்தலில், என்ஆர் காங்கிரஸ் - பாஜ கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது. ஆனால், முதல்வராக பதவியேற்று உள்ள ரங்கசாமி பாஜவுடன் ஏன் கூட்டணி அமைத்தோம் என்று தற்போது யோசித்து வருவதாக கூறப்படுகிறது. முதல்வர் ரங்கசாமி, ரிமோட் கண்ட்ரோல் போல் செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளது. பாஜவை எதிர்க்கவும் முடியாமல், தனிப்பட்ட முறையில் எந்த முடிவும் எடுக்க முடியாமல் ரங்கசாமி வாழ்க்கை நகர்ந்து வருகிறது.

கர்நாடகாவில் ஆட்சியை இழந்து மீண்டும் அரியணையில் ஏறிய பாஜ: 2018ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தனி பெரும் கட்சியாக வெற்றி பெற்றபோதும், ஆட்சிக்கு அமைக்க பாஜவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், பாஜவின் எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். இதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால், அடுத்த 24 மணி நேரத்துக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார். இதன்பின், மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தது. முதல்வராக குமாரசாமி பதவியேற்றார். ஆனால், 14 மாதங்களில் இந்த ஆட்சியை கவிழ்க்க முயற்சிகள் தொடங்கியது. 13 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், 3 மஜத எம்எல்ஏக்கள் திடீரென ராஜினாமா செய்து ஆட்சியை கவிழ்த்தனர். இதையடுத்து, பாஜ மீண்டும் ஆட்சி அமைத்தது. எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். 16 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் ராஜினாமா செய்த 13 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது பாஜ. இதில் வெற்றி பெற்ற மாற்று கட்சியினர் இன்று அமைச்சர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், உட்கட்சி பூசலால் வெகு காலம் ஆட்சியில் நிலைக்க முடியாமல் எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, கர்நாடாகவின் முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றார்.

சொகுசு ஓட்டல்களால் மகாராஷ்டிராவில் மாற்றம்: மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜ-சிவசேனா கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது. ஆனால், இரண்டரை ஆண்டுக்கு பின் சிவசேனாவை சேர்ந்தவரை முதல்வராக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதை பாஜ ஏற்காததால், 4 நாளில் பாஜ ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் இணைந்து புதிய ஆட்சி அமைத்தது. முதல்வராக சிவசேனாவை சேர்ந்த உத்தவ் தாக்கரே பதவியேற்றார். இந்நிலையில், கடந்த மாதம் இறுதியில் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் அக்கட்சியின் சட்டமன்ற தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுடன் குஜராத் மாநிலத்துக்கு பறந்தனர். பின்னர், அசாம் மற்றும் கோவா என சொகுசு விடுதிகளில் ஆடம்பரமான வாழ்க்கையை நடத்தினர். உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மையை இழந்ததால், அவர் ராஜினாமா செய்தார். அதிருப்தி எம்எல்ஏக்களுடன் சேர்ந்து பாஜ கூட்டணி ஆட்சியை அமைத்தது. ஆனால், இந்த ஆ(கா)ட்சி எவ்வளவு நாள் என்று தெரியவில்லை. சிவசேனா சார்பில் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு தகுதி நீக்கம் செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு பொறுத்து மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

குட்டிகளுடன் சேர்ந்து மேகாலயாவில் பதவியேற்பு: மேகாலயாவில் 2018ம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்த உள்ள 60 தொகுதிகளில் 21 இடங்களில் காங்கிரசும், 20 தொகுதிகளில் தேசிய மக்கள் கட்சியும் வெற்றி பெற்றன. ஆனால், வெறும் 2 தொகுதிகளில் வென்ற பாஜ, இந்த மாநிலத்தில் ஆட்சி அமைத்ததுதான் மெகா ஹைலைட். தேசிய மக்கள் கட்சி, ஐக்கிய ஜனநாயக மக்கள் கட்சி, மக்கள் ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது பாஜ.

Related Stories: