தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் செல்போன் ஜாமர் கருவிகளை பயன்படுத்துவது சட்டவிரோதம்

புதுடெல்லி: செல்போன் ஜாமர்களை தனியார் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்று  ஒன்றிய தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தகவக் தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பல ஊடக அறிக்கைகளின்படி, வயர்லெஸ் ஜாமர் மற்றும் பூஸ்டர்/ரிப்பீட்டர்களை முறையாகப் பயன்படுத்துவது குறித்து பொது மக்களுக்கு கடந்த 1ம் தேதி தொலைத்தொடர்புத் துறை, தகவல் தொடர்பு அமைச்சகம் ஒரு ஆலோசனையை வழங்கி உள்ளது. அதன்படி, செல்போன் சிக்னல் ஜாமர், ஜிபிஎஸ் பிளாக்கர் அல்லது பிற சிக்னல் ஜாமர் சாதனங்களைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது.

குறிப்பாக இந்திய அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டது தவிர, தனியார் துறை நிறுவனங்கள், தனியார் தனிநபர்கள் இந்தியாவில் ஜாமர்களை வாங்கவோ, பயன்படுத்தவோ முடியாது. இந்திய அரசின் வழிகாட்டுதல்களின் கீழ் அனுமதிக்கப்பட்டதைத் தவிர, இந்தியாவில் சிக்னல் ஜாமர் சாதனங்களை விளம்பரப்படுத்துவது, விற்பனை செய்வது, விநியோகிப்பது, இறக்குமதி செய்வது அல்லது சந்தைப்படுத்துவது சட்டவிரோதமானது. சிக்னல் பூஸ்டர்/ ரிப்பீட்டரைப் பொறுத்தவரை, உரிமம் பெற்ற டெலிகாம் சேவை வழங்குநர்களைத் தவிர வேறு எந்தவொரு தனிநபர்/ நிறுவனமும் மொபைல் சிக்னல் ரிப்பீட்டர்/பூஸ்டரை வைத்திருப்பது, விற்பனை செய்வது மற்றும் பயன்படுத்துவது சட்டவிரோதமானது’ என்று கூறி உள்ளது.

Related Stories: