உணவு கிடைக்காத ஆத்திரத்தில் சத்துணவு கூடத்தை சூறையாடிய காட்டு யானைகள்

வால்பாறை: வால்பாறை அரசு பள்ளி சத்துணவு கூடத்தில் உணவு கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த காட்டு யானைகள், கட்டிடங்களை உடைத்து சேதப்படுத்தியது. கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்து உள்ளது பெரியார்நகர். இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. நேற்று அதிகாலை 1 மணி அளவில் அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து 8 யானைகள் வெளியேறி இந்த பள்ளி பகுதிக்கு வந்தன. அந்த யானைகள் பள்ளி வளாகத்தில் உலா வந்து முற்றுகையிட்டு உணவு தேடின.

பின்னர் அங்குள்ள சத்துணவு கூடத்தின் பகுதிக்கு சென்றன. சத்துணவு கூடத்தின் சுவற்றை இடித்த யானைகள் அங்கு உணவுகளை தேடின. ஆனால் சத்துணவு கூடத்தில் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் யானைகள் ஆத்திரமடைந்தன. அங்கிருந்த கழிப்பறை உள்ளிட்ட கட்டிடங்களின் கதவுகளை நொறுக்கி சேதப்படுத்தின. அதன்பின்னர் யானைகள் 60 ஏக்கர் என்ற பகுதியில் முகாமிட்டன. யானைகளை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

Related Stories: