ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டியதால் வெறிச்சோடி காணப்படும் பெருமாள் ஏரி: புதிய மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க கோரிக்கை

குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி அடுத்த கொத்தவாச்சேரி, குண்டியமல்லூர், அகரம் கிராமங்களுக்கு இடையே 227 சதுர கிலோமீட்டரில் அமைந்துள்ள பழமையான பெருமாள் ஏரி, கடலூர் மாவட்டத்தின் பெரிய ஏரிகளில் ஒன்றாகும். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரில் கலந்து வரும் மண்ணால், பெருமாள் ஏரி தூர்ந்து கொள்ளளவு குறைந்து போனது. இதனால், இந்த ஏரியை நம்பி விவசாயம் செய்த 23 கிராம மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இந்த ஏரியை தூர்வாரி, கரையை பலப்படுத்தி, கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும் என 23 கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதை ஏற்று, தமிழக அரசு ரூ.120 கோடி நிதி ஒதுக்கி ஏரியை தூர் வாரி, கரைகளை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இப்பணிகளை மேற்கொண்ட நிறுவனம் ஏரியின் கிழக்கு கரையில் இருந்த ஆயிரக்கணக்கான மரங்களை ராட்சத எந்திரம் மூலம் வேருடன் பிடுங்கி, தீயிட்டு எரித்து சாம்பலாக்கியது. அதேபோல், விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை பணிக்கு பெருமாள் ஏரியில் பல்வேறு நிறுவனங்கள் மண் எடுத்து வருகின்றனர். இதற்காக, மரங்களை வேருடன் பிடுங்கி, அகற்றினர். இதற்கு அந்த பகுதிகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

பச்சை பசேலென பசுமைபோர்வை போர்த்தியதுபோல் காட்சி அளித்த பெருமாள் ஏரிக்கரை, தற்போது மரங்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ஏரியை தூர் வாரி, கரைகளை பலப்படுத்த மேற்கொண்டுள்ள நிறுவனம், பணிகள் முடிந்தபின், ஏரிக்கரைகளில் ஒரு மரத்திற்கு 10 கன்றுகள் வீதம் வெட்டப்பட்ட அனைத்து மரங்களுக்கும், பதிலாக ஏரிக்கரையில் அமைந்துள்ள 22 கிலோ மீட்டர் தூரத்திற்கு, பறவைகள் வந்து தங்க, வகை செய்ய மரக்கன்றுகள் நட்டு வளர்க்க வேண்டும். பொதுமக்கள் வந்து பொழுதை கழிக்கின்ற வகையில் பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: