குற்றாலத்தில் தண்ணீர் வரத்து குறைந்தது: மெயினருவி, ஐந்தருவியில் இன்று குளிக்க அனுமதி

தென்காசி: குற்றாலத்தில் நேற்று மாலை முதல் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் மெயினருவி, ஐந்தருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 9 மணிக்கு மேல் தண்ணீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். குற்றாலத்தில் கடந்த வாரம் வரை சாரல் அவ்வளவாக இல்லை. வெயில் காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக இதமான சூழல் நிலவியது.

நேற்று பகலில் வெயில் இல்லை. வானம் பெரும்பாலும் மேகமூட்டமாக காணப்பட்டது. அவ்வப்போது சாரல் நன்றாக பொழிந்தது. மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தொடர் சாரல் மழை காரணமாக மாலையில் மெயினருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் நேற்று மாலை 6 மணி முதல் இந்த 2 அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

தண்ணீர் விழும் வேகம் இன்று காலையிலும் குறையாததால் மெயினருவியிலும், ஐந்தருவியிலும் இன்று 2வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. பழைய குற்றால அருவி, புலியருவியில் தண்ணீர் மிதமாக விழுந்ததால் சுற்றுலா பயணிகள் அங்கு சென்று குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு மேல் மெயினருவி, ஐந்தருவியில் தண்ணீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories: