களக்காடு தலையணை சிறுவர் பூங்காவில் சிதிலமடைந்த விளையாட்டு உபகரணங்கள்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

களக்காடு: களக்காடு தலையணை பூங்காவில் சிதிலமடைந்த விளையாட்டு உபகரணங்களால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை நீர்வீழ்ச்சி உள்ளது. வனத்துறையினரால் சுற்றுச்சூழல் சுற்றுலா ஸ்தலமாக அறிவிக்கப்பட்டுள்ள தலையணையில் ஓடும் தண்ணீர் மூலிகைகளை தழுவியபடி குளுமையுடன் ஓடுவதால் அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் தனிஆர்வம் காட்டி வருகின்றனர்.

தினமும் உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் தலையணைக்கு வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லை என்று தொடர்ந்து புகார் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தலையணையில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. அதில் சிறுவர்கள் விளையாடி மகிழும் வகையில் சறுக்கு, ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்கள் பொருத்தப்பட்டன. இது குழந்தைகளுக்கு உற்சாகத்தை கொடுத்தது. ஆற்றில் குளித்துவிட்டு சுற்றுலா பயணிகள் சிறுவர் பூங்காவிற்கு சென்று இன்புற்றனர்.

சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர். ஆனால் சிறுவர் பூங்கா தொடர்ந்து பராமரிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விளையாட்டு உபகரணங்கள் உடைந்து சேதமடைந்து பயன்படுத்தப்பட முடியாத நிலையில் காணப்படுகிறது. சறுக், ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்கள் சேதமடைந்து காட்சி பொருளாகி விட்டன. இதனால் சிறுவர் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் விளையாடி பொழுதை போக்க முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். இதுபற்றி சுற்றுலா பயணிகள் கூறுகையில், ‘தலையணைக்கு வர நபர் ஒருவருக்கு ரூ.40 வீதம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆனால் இங்கு குளிப்பதை தவிர வேறு எந்த பொழுது போக்கு அம்சங்களும் இல்லை. ஏற்கனவே செயல்பட்டு வந்த அருங்காட்சியகமும், பார்வை மாடமும் மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது. சிறுவர் பூங்காவும் சிதிலமடைந்துள்ளது. அதிலுள்ள விளையாட்டு உபகரணங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. போதிய பராமரிப்பு இல்லாததே அதற்கு காரணம் ஆகும்” என்றனர். எனவே சேதமடைந்துள்ள விளையாட்டு உபகரணங்களை சீர் செய்ய வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: