அதிமுக ஆட்சியில் கோடநாடு வழக்கை முடிப்பதில் மட்டுமே கவனம்; உண்மை குற்றவாளியை கண்டறிய ஆர்வம் இல்லை: மருது அழகுராஜ் பரபரப்பு பேட்டி

சென்னை: அதிமுக பொதுக்குழுவில் எங்கு பார்த்தாலும் அடியாட்கள் மயமாக இருந்தது என அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த வானகரத்தில் வரும் 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவை கூட்ட எடப்பாடி தரப்பு தீவிரமாக இறங்கியுள்ளது. அதே நேரத்தில் எடப்பாடி நடத்தும் கூட்டம் சட்டப்படி செல்லுபடியாகாது என்று ஓபிஎஸ் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழின் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் நீக்கப்பட்டது அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய செய்தது.

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா பத்திரிகை ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகிய நிலையில் மருது அழகுராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; அதிமுக பொதுக்குழுவில் எங்கு பார்த்தாலும் அடியாட்கள் மயமாக இருந்தது. எதோ ஒரு நோக்கத்தோடு அதிமுக பொதுக்குழுவில் ஆட்கள் திரட்டப்பட்டிருந்தனர். நிர்வாகிகளுக்கு பின்னால் அமர வைக்கப்பட்டிருந்த சிலர் ஓ.பன்னீர்செல்வத்தை நாகூசும் வார்த்தைகளால் வசைமாரி பொழிந்தனர். பொதுக்குழுவில் திட்டமிட்டு திரைக்கதை எழுதி ஓபிஎஸ் அவமானப்படுத்தப்பட்டார். பொதுக்குழு மற்றும் செயற்குழுவை நேரடி ஒளிபரப்பு செய்தது திட்டமிட்ட ஒன்று.

ஓபிஎஸ் அவமானப்படுத்தப்பட்ட போது மேடையில் இருந்த எடப்பாடி பழனிசாமி எதுவும் பேசாமல் இருந்தது ஏன்? கூச்சலிட்ட கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி கண்டிக்கவில்லை. அதிமுக தலைமைப்பதவியை எப்படியாவது கைப்பற்றிட வேண்டும் என்று திட்டமிட்டு நடத்தப்பட்ட செயல் நாகரிகமற்றது. அதிமுகவின் தலைமையை தொண்டர்கள் தான் தேர்வு செய்ய வேண்டுமே தவிர; நிர்வாகிகள் அல்ல. யாருடைய சுயநலம் அதிமுகவின் பிளவுக்கு காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். இரட்டை தலைமை மக்களால் ஏற்கப்பட்டது. 23ல் நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானத்தில் செயலலிதாவுக்கு பாரத ரத்னம் வழங்க வேண்டும் என்ற தீர்மானமும் இருந்தது.

வழக்கமாக நடக்கும் படி இந்த பொதுக்குழு நடைபெறவில்லை. அதிமுகவை ஓபிஎஸ் - ஈபிஎஸ் முன்னெடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கை பொய்த்துப் போயுள்ளது. 2 பேரும் ஒற்றுமையாக கட்சியை கொண்டு சென்றிருந்தால், அதிக வெற்றி பெற்றிருக்க முடியும். யாருடைய சுயநலம் அதிமுகவின் பிளவுக்கு காரணம் என்பது அனைவருக்கு தெரியும். நில அபகரிப்பு போல அதிமுக தலைமை பதவி அபகரிக்கப்படுகிறது; தொண்டர்களை விலை கொடுத்து வாங்கிவிடலாம் என ஈபிஎஸ் தரப்பு நினைக்கிறது இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மவுனம் காப்பது ஏன்?

முதலமைச்சராக 4 ஆண்டுகள் இருந்த பழனிசாமி கோடநாடு வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய போதிய அக்கறை காட்டவில்லை என புகார் தெரிவித்தார். ஜெயலலிதாவின் எஸ்ட்டேட்டில் கொலை, கொள்ளை நடந்த போதும் அப்பாதைய முதலமைச்சரோ அமைச்சரோ அங்கு செல்லாதது ஏன்? கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சஜீவனுக்கு அதிமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது ஏன்? கோடநாடு வழக்கில் உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என தற்போதைய திமுக அரசுக்கு அதிமுக அழுத்தம் கொடுக்காதது ஏன்? அதிமுக ஆட்சியில் கோடநாடு வழக்கை முடிப்பதில் மட்டுமே கவனம்; உண்மை குற்றவாளியை கண்டறிய ஆர்வம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: