காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் 1,16,783 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு; நிலுவை தொகை வசூலிக்க உத்தரவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், 2021க்குள்  காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள  5 ஊராட்சி  ஒன்றியத்துக்கு உட்பட்ட 272 கிராம ஊராட்சிகளில் 1350  குக்கிராமங்களில் அனைத்து வீடுகளுக்கும் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 55 லிட்டர் வீதம் தரமான சுத்தமான குடிநீர்  வழங்குவது மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகள், அங்கன்வாடிகள், பொது நிறுவனங்களுக்கும் தரமான குடிநீர்  வழங்குவதே மாவட்டத்தின் சிறப்பம்சமாகும்.

ஒன்றிய அரசின் 45 சதவீத பங்களிப்பு, மாநில அரசின் 45 சதவீத பங்களிப்பு மற்றும் பொது மக்களின் 10 சதவீத பங்களிப்புடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில்  காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2020-21 நிதியாண்டில் 116783  வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 223 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், 458 ஆழ்துளை கிணறுகள், 49 திறந்தவெளி  கிணறுகள், 104 பம்ப் ரூம்கள், 897.76 கி.மீ குடிநீர் பைப் லைன் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களின் 10 சதவீத பங்களிப்பு தொகை (ஒரு குடிநீர் குழாய் இணைப்பிற்கு பொது பிரிவினர் ரூ.1500, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர் ரூ.750. பெரும்பாலான கிராம ஊராட்சிகளில் முழுமையாக வசூல் செய்யப்படாமல் உள்ளது. இந்த நிலுவை தொகையினை வசூல் செய்ய  நேற்று சிறப்பு முகாம் நடத்திட மாவட்ட நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டுள்ளது. மேற்காணும் சிறப்பு முகாமில், ஊராட்சி ஒன்றிய, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அனைத்து ஊராட்சி ஒன்றிய களப்பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்று முகாமினை நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடங்கிய அனைத்து கிராம ஊராட்சியிலும் உள்ள மக்கள் பிரதிநிதிகள் பங்கெடுத்து பொது மக்களை ஊக்கப்படுத்தி பங்களிப்பு தொகையை செலுத்த முன்வருமாறு நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: