சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரம்; சிறையில் உள்ள 4 பேரிடம், மருத்துவக்குழுவினர் விசாரணை

ஈரோடு: சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரிடம் மருத்துவக்குழுவினர் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை வழக்கில் சிறுமியின் தாய், தந்தை, புரோக்கராக செயல்பட்ட வெட்டுக்காட்டுவலசு பகுதியை சேர்ந்த மாலதி, சிறுமியின் வயதை மாற்றி போலியாக ஆதார் கார்டு தயாரித்து கொடுத்த சூரம்பட்டியை சேர்ந்த ஜான் ஆகிய 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவ்விகாரத்தில் மருத்துவமனைகள் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரக அதிகாரிகள் ஈரோடு, சேலம், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் மருத்துவமனை நிர்வாகிகள், டாக்டர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் ஈரோடு அருகே ஆர்.என்.புதூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட சிறுமியிடமும் விசாரணை நடத்தினர்.

இதே போல போலீசாரிடம் வழக்கு விசாரணை நிலவரங்கள் குறித்தும் கேட்டறிந்தனர். இந்நிலையில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சிறுமியின் தாய், கருமுட்டை விற்பனை புரோக்கர் மாலதி, கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறுமியின் வளர்ப்பு தந்தை, ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ஜான் ஆகியோரிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று ஈரோடு மகளிர் கோர்ட்டில் தமிழக மருத்துவ பணிகள் இயக்குநரக அதிகாரிகள் கடந்த வாரம் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரிடமும் விசாரணை நடத்த நீதிபதி மாலதி அனுமதி வழங்கினார். இந்நிலையில், டாக்டர் விஸ்வநாதன் தலைமையிலான மருத்துவ குழுவினர் விசாரணை நடத்துவதற்காக நேற்றிரவு ஈரோடு வந்தனர். பின்னர் இன்று காலை ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலி ஆதார் ஆவணம் தயாரித்த ஜானிடம் விசாரணையை தொடங்கினர்.

பின்னர் கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டள்ள சிறுமியின் தந்தையிடம் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து கோவை சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சிறுமியின் தாய், கருமுட்டை விற்பனை புரோக்கர் மாலதி ஆகியோரிடமும் இன்று மதியத்திற்கு மேல் விசாரணை நடத்த உள்ளனர். விசாரணையில் எத்தனை முறை சிறுமியிடம் கருமுட்டை எடுக்கப்பட்டது. பாலியல் ரீதியான தொல்லைகள், மைனர் பெண் என்ற விவரம் தெரிந்து மருத்துவமனை நிர்வாகங்கள் கருமுட்டை எடுக்க முன்வந்தார்களா? வேறு யாரெல்லாம் இது போல பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Related Stories: