கோயில் திருவிழாவுக்கு சென்று திரும்பியபோது பைக் மீது கார் மோதியது பெண் பலி; தம்பி சீரியஸ்

திருவள்ளூர்: கோயில் திருவிழாவுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது பைக் மீது கார் மோதியதில் பெண் பலியானார். அவரது தம்பி கவலைக்கிடமாக உள்ளார். திருவள்ளூர் அடுத்த பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் குணசுந்தரி (50). அவரது தம்பி முருகன்(45) இவர்கள் இருவரும்  நேற்றிரவு திருப்பாச்சூரில் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்கு வந்தனர்.

திருவிழா முடிந்ததும் அங்கிருந்து இன்று காலை  பைக்கில் திருவள்ளூர் வழியாக ஆவடி ரோடு-காக்களூர் பைபாஸ் சாலையில் வந்தனர். அங்குள்ள பங்க்கில் பெட்ரோல் போட்டுவிட்டு சாலையை கடக்க முயன்றபோது பின்னால் வந்த கார், அவர்களது பைக் மீது வேகமாக மோதியுள்ளது.

இதில் குணசுந்தரி, முருகன் ஆகியோர் தூக்கிவீசப்பட்டு படுகாயத்துடன் துடித்தனர். இதை பார்த்ததும் அவ்வழியாக சென்றவர்கள், அவர்களை மீட்டு உடனடியாக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குணசுந்தரி ஏற்கனவே இறந்துவிட்டார் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

படுகாயம் அடைந்த முருகன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: