2-வது கணவரின் ஆசைக்காக குழந்தையை கடத்திய பெண்; அதிரடி கைது

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தையை கடத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர். 2வது கணவரின் ஆசையை நிறைவேற்ற குழந்தை பெற்றதாக நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்தவர் யூனிஸ் (28). இறைச்சிக்கடைக்காரர். இவரது மனைவி திவ்யபாரதி (25). இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மீண்டும் திவ்யபாரதி கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான திவ்யபாரதி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 29ம் தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

தாய்-சேய் வார்டில் குழந்தையை கண்காணித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு திவ்யபாரதி தனது குழந்தையுடன் தூங்கினார். நேற்று அதிகாலை 4.50 மணி அளவில் திவ்யபாரதி எழுந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்கு பதிந்து தனிப்படை அமைத்து விசாரித்துவந்தனர். மேலும், கோவை ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் தனிப்படை போலீசார் நடத்திய ஆய்வில் ஒரு பெண், சிறுமியுடன், கட்டைப்பையுடன் செல்வது பதிவாகி இருந்தது.இதை அடுத்து தனிப்படை போலீசார் பாலக்காடு சென்று விசாரித்தனர். விசாரணையில் அந்த பெண் கொடுவாயூரில் உள்ள தனது வீட்டுக்கு சென்றது தெரியவந்தது.

இதை அடுத்து போலீசார் பின் தொடர்ந்து அங்கு சென்றனர். அங்கு அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் செபினா(36) என்பதும் தனது மூத்த மகளுடன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று குழந்தையை கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதை அடுத்து இன்று அதிகாலை 5 மணி அளவில் குழந்தையை போலீசார் மீட்டனர். பின்னர் குழந்தையை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் எடுத்து வந்தனர். அரசு மருத்துவமனையில் கோவை மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் பெண் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தார்.

பிடிப்பட்ட பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்ததாவது: செபினா தன் முதல் கணவரை பிரிந்து 3 பெண் குழந்தைகளுடன் கொடுவாயூரை சேர்ந்த மணிகண்டன் என்பவருடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன், முதல் கணவருக்கு பிறந்த 3 பெண் குழந்தைகளை நாம் வளர்த்து வருகிறோம். எனக்கும் ஒரு குழந்தை வேண்டும் என கூறி உள்ளார். ஆனால் செபினா தான் குடும்ப கட்டுப்பாடு செய்ததை 2வது கணவரிடம் கூறாமல் மறைத்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் வேலை விஷயமாக வெளியூர் சென்று விட்டார். எனக்கும் ஒரு குழந்தை வேண்டும் என மணிகண்டன் கூறியதால் இதற்காக செபினா தனக்கு குழந்தை உண்டாகி உள்ளதாக மணிகண்டனிடம் கூறி நாடகமாடி உள்ளார்.

இதற்காக பொள்ளாச்சி, திருப்பூர், கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு குழந்தையை திருடி கணவரை ஏமாற்றி விடலாம் என திட்டமிட்டுள்ளார். சம்பவத்தன்று குழந்தையை கடத்துவதற்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு தனது 15 வயது மூத்த மகளுடன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அதிகாலை வந்துள்ளார். மூத்த மகளை மருத்துவமனைக்கு வெளியே நிறுத்தி விட்டு உள்ளே சென்ற செபினா, பிறந்து 4 நாட்களே ஆன குழந்தையை கட்டை பையில் வைத்து கொண்டு வெளியே வந்துள்ளர். மருத்துவமனைக்கு வெளியே நின்று கொண்டிருந்த தனது மூத்த மகளை அழைத்து கொண்டு அங்கிருந்த ஆட்டோவில் ஏறி பொள்ளாச்சி பஸ் நிலையம் சென்றுள்ளார்.

பின்னர் அங்கிருந்து பஸ் ஏறி கோவை ரயில் நிலையம் சென்ற செபினா, பாலக்காடு ரயில் ஏறி கொடுவாயூர் சென்றுள்ளார். அங்கு வீட்டில் இருந்த தனது 2வது கணவர் மணிகண்டனிடம் நமக்கு பிறந்த பெண் குழந்தை என கூறி அவரிடம் கொடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்து செபினாவை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: