புறநகர் மின்சார ரயில்களில் கைவரிசை செல்போன்கள் திருடிய 2 பேர் கைது

ஆவடி: சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் செல்லும் மின்சார ரயில்களில் தினமும் ஏராளமான பயணிகள் சென்று வருகின்றனர். இதில், களைப்பின் காரணமாக சீட் கிடைத்ததும் சிலர் தூங்கி விடுவதுண்டு. காலை, மாலை வேளைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். பணிக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடம் இல்லாமல் படிக்கட்டுகளில் ஆபத்தான நிலையில் தொங்கியபடி சென்று வருகின்றனர்.

இத்தகைய சந்தர்ப்பங்களை பயன்படுத்தி, ரயில் பயணிகளிடம் செல்போன் பறிக்கும் சம்பவம் நடந்து வருகிறது. இதேபோன்று ஆவடி, பட்டாபிராம் செல்லும் மின்சார ரயில்களில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆவடி பகுதியை சேர்ந்த பாலாஜி, ஆன்டோமரியா, விக்னேஷ் ஆகிய 3 பேரின் விலையுயர்ந்த செல்போன்களை மர்ம கும்பல் பறித்தது. புகாரின்பேரில் ஆவடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம கும்பலை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில், பட்டாபிராம் ரயில் நிலைய பகுதிகளில் நேற்று மாலை ஆவடி ரயில்வே எஸ்ஐ சுந்தர்ராஜன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த 2 பேர், போலீசாரை பார்த்ததும் ஓட முயன்றனர். அவர்களை விரட்டி பிடித்து காவல்நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர். அவர்கள் ஆவடி, நந்தவனமேட்டூர் பகுதியை சேர்ந்த ராகேஷ் (21), சதீஷ்குமார் (20) என தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து 3 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: