கோவில்பட்டி அருகே துணிகரம் கோயில் பூட்டை உடைத்து, ஐம்பொன் சிலை கொள்ளை

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே கோயில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே புறநகர் பகுதியான சுபா நகரில் வெங்கடேஸ்வர பெருமாள் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் பூசாரியாக வரதராஜன்  இருந்து வருகிறார். நேற்றிரவு வழக்கம் போல் கோயிலில் பூஜை முடித்த அவர் வீட்டுக்கு சென்றார்.

இன்று காலை கோயிலை திறக்க வந்த பூசாரி வரதராஜன், கோயில் கதவு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது கோயில் பூட்டு, கருவறை பூட்டு ஆகியவை உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கருவறையில் இருந்த 2 அடி உயரம், 8 கிலோ எடை கொண்ட ஐம்பொன் சிலை மற்றும் வெள்ளி கிரீடம், தலைக் கவசம், வெள்ளி ஜடாரி, வெள்ளி அரைஞாண் கயிறு உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். இதுகுறித்து பூசாரி வரதராஜன், கோவில்பட்டி மேற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.  கொள்ளையர்களை பிடிக்க அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காமிரா பதிவுகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

கோவில்பட்டி சுபா நகர் பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நள்ளிரவு வரை மக்கள் நடமாட்டம் இருக்கும் இந்தப் பகுதியில் இன்று அதிகாலை தான் கொள்ளை நடந்திருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர்.

Related Stories: