ஆடிப்பட்டத்தை எதிர்நோக்கி நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி  சுற்றுவட்டார கிராமங்களில், நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் பலர்  தீவிரமாக இறங்கியுள்ளனர். ஆடிப்பட்டத்தின்போது அறுவடை செய்ய முடிவு  செய்துள்ளனர். பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் தென்னைக்கு  அடுத்தப்படியாக, பல்வேறு காய்கறிகள் மற்றும் மானவாரி பயிர்கள் சாகுபடி  மேற்கொள்ளப்பட்டு குறிப்பிட்ட மாதத்தில் அறுபடை செய்யப்படுகிறது. இதில்,   மானாவாரி பயிர்களான மக்காசோளம், பருத்தி, நிலக்கடலை, தட்டைபயிர் அதிகளவில்  சாகுபடி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை, ஆடி மற்றும் தை  பட்டத்தை எதிர்நோக்கி மானாவாரி பயிர்கள்  விதைக்கப்பட்டு குறிப்பிட்ட சில  மாதங்களிலேயே  அறுவடை செய்யப்படுகிறது.

 

இதற்காக, பருவமழை மற்றும் கோடைமழை  காலங்களில் விவசாயிகள் தங்கள் நிலங்களை உழுது, மானாவாரி பயிடும் பணியில்  ஈடுபடுகின்றனர். இந்த ஆண்டில் கடந்த மே மாதத்தில் அவ்வப்போது இடியுடன்  கூடிய கனமழை பல நாட்கள் பெய்தது. இது விவசாயிகளுக்கு ஓரளவு ஆறுதலை  கொடுத்தது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் பலர், தங்கள் விளை நிலங்களில்  மானாவாரி பயிர்களை சாகுபடி மேற்கொள்ள துவங்கினர்.

 இதில்,  சுற்றுவட்டாரத்தில் கோவிந்தனூர், சமத்தூர், பொன்னாபுரம், வடக்கிபாளையம்,  சூலக்கல், ராசக்காபாளையம், கோமங்கலம்புதூர், முத்தூர்,  நல்லிகவுண்டன்பாளையம், கோட்டூர் உள்ளிட்ட பல கிராமங்களில் நிலக்கடலை  சாகுபடியினை விவசாயிகள் மேற்கொண்டனர். கோடைக்கு பிறகு விவசாயிகள்  தங்கள் விளை நிலங்களில் உழவு செய்து, அதில் நிலக்கடலை சாகுபடியை  துவங்கினர்.

தற்போது பல இடங்களில் நிலக்கடலை செடி துளிர்விட்டுள்ளதால்,  அதன் அருகே உள்ள களைகளை அப்புறப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள்  ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வாரத்தில் சில நாட்கள் பருவமழை பெய்தது. இருப்பினும்,  பருவமழை வலுத்து தொடர்ந்து பெய்ய விவசாயிகள் எதிர்பார்த்து  கொண்டிருக்கின்றனர். பருவமழை தொடர்ந்து இருக்கும்போது, வரும்  ஆடிப்பட்டத்தில், நிலக்கடலை அறுவடைக்கு வந்துவிடும் என விவசாயிகள்  தெரிவித்தனர்.

Related Stories: