திண்டுக்கல்லில் கழிவுநீரோடை ஆக்கிரமிப்பால் 4 வழிச்சாலையில் ஓடும் கழிவுநீர்-ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் கழிவுநீரோடை ஆக்கிரமிப்பால், 4 வழிச்சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இது குறித்து ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல்லிலிருந்து பெங்களூரு மற்றும் சென்னை செல்லும் நான்குவழிசாலையின் சந்திக்கும் இடமாக அஞ்சலி ரவுண்டானா உள்ளது. இந்த பகுதி வழியாகத்தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும். இந்நிலையில், ரவுண்டானா பகுதியில் பிரபல உணவகங்கள், தேநீர் கடைகள், நான்கு சக்கர சொகுசு வாகன மெக்கானிக் கடைகள் உள்ளன.

இப்பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர் தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஓடைகள் வழியாக, செட்டிநாயக்கன்பட்டி வரை கடந்த 15 ஆண்டுகளாக சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக அப்பகுதியில் தனிநபர் ஒருவர் கழிவுநீர் ஓடையில் குறுக்கே மண்ணைக் கொட்டி ஆக்கிரமித்துள்ளார். இதனால், கழிவுநீர்  குளம் போல தேங்கி நான்குவழிச்சாலையில் ஆறாக ஓடுகிறது. துர்நாற்றம் வீசுவதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் முகத்தை மூடிக் கொண்டு செல்கின்றனர். இது குறித்து அப்பகுதி வியாபாரிகள், உணவக உரிமையாளர்கள், செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு  நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: