சென்னை ஜி.ஹெச்.சில் சிகிச்சை பெற்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தூய்மை பணியாளருக்கு வலை

தண்டையார்பேட்டை: சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கிட்னி பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தூய்மை பணியாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், கடந்த சில நாட்களுக்கு முன் புறநகர் பகுதியை சேர்ந்த சுமார் 49 வயது மதிக்கத்தக்க பெண் கிட்னி பாதிப்பு காரணமாக சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

இவருக்கு உதவியாக 13 வயது மகள் இருந்தார். கடந்த 30-ம் தேதி அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு படுக்கையில் அந்த பெண் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு தூய்மை பணியில் ஈடுபட்ட பழனி என்பவர், அந்த பெண்ணுக்கு பல்வேறு வகையில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அப்பெண் சத்தம் போட்டிருக்கிறார்.

சத்தம் கேட்டு நர்ஸ்கள் மற்றும் ஊழியர்கள் ஓடிவந்தனர். இதை பார்த்ததும் தூய்மை பணியாளர் பழனி தப்பி ஓடிவிட்டார். புகாரின்பேரில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை புறக்காவல் நிலைய போலீசார், தலைமறைவான பழனியை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். இதில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால், தனது மகளுடன் அப்பெண் சாலையில் அமர்ந்து பிச்சை எடுத்து குடும்பம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: