போடி அருகே மான் வேட்டையாடிய 2 பேர் கைது

போடி : தேனி மாவட்டம், போடி வனத்துறை ரேஞ்சர் செல்வராஜ் தலைமையில், வனக்காவலர்கள் போடி அருகே உள்ள உலகுரட்டி சாலையில் நேற்று முன்தினம் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சின்னமுந்தல் பாலம் அருகே 4 இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேரை வழிமறித்தனர். அப்போது 2 பேர் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதையடுத்து அங்கிருந்த 2 பேரிடம் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் 40 கிலோ மீளமான் கறி இருந்தது.

அதனை பறிமுதல் செய்து வனக்காவலர்கள் விசாரித்தபோது, போடி கீழத் தெருவை சேர்ந்த சிவக்குமார் (39), சூரியபிரகாஷ் (23) என்பது தெரியவந்தது. இவர்கள் வேட்டை நாய்களை வைத்து உலகுரட்டி வனப்பகுதியில் மானை வேட்டையாடியது தெரிந்தது. அவர்களை நேற்று கைது செய்த வனத்துறையினர் போடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதி உத்தரவின்பேரில், இருவரும் தேனி தேக்கம்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தப்பியோடிய போடி 1வது வார்டு புதூரைச் சேர்ந்த சீனிவாசன், போடி கீழத்தெருவை சேர்ந்த மருதுபாண்டியன் ஆகிய இருவரையும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Stories: