மன்னார்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரு குவிண்டால் பருத்தி ரூ.10,009க்கு அதிகபட்ச விற்பனை

மன்னார்குடி : மன்னார்குடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் ஒரு குவிண்டால் பருத்தி அதிகபட்சமாக 10,009 ரூபாய்க்கு விற்பனையானது.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கோட்டூர், கூத்தாநல்லூர், திருத்துறைப் பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் 6 ஆயிரத்து 172 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி நடைபெற்று தற்போது பஞ்சுகள் அறுவடை செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்த பருத்தி பஞ்சுகளை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு கொண்டு வந்து மறைமுக ஏலம் விடப்படுவது வழக்கம். அதன்படி, மன்னார்குடி ஆர்பி சிவம் பகுதியில் இயங்கும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த சில வாரங்களாக பருத்தி ஏலம் நடந்து வருகிறது.

இங்கு திருவாரூர் விற்பனைக்குழு செயலாளர் சரசு தலைமையில், கண்காணிப்பாளர் (பொ) செல்வராஜ், இளநிலை உதவியாளர்கள் ரஜினிகாந்த் ஆகியோர் முன்னிலையில் பருத்தி ஏலம் நேற்று நடந்தது.இதில் 330 விவசாயிகள் 680 மூட்டைகளில் பருத்தி பஞ்சுகளை ஏலத்துக்கு கொண்டு வந்தனர். கும்பகோணம், செம்பனார்கோவில், விருத்தாச்சலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தியை ஏலத்தில் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி .10, 009 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.6589க்கும் விற்பனையானது.

Related Stories: