ரயிலில் கடத்திய 11 கிலோ கஞ்சா பறிமுதல்

ஜோலார்பேட்டை : காட்பாடி- ஜோலார்பேட்டை இடையே சிறப்பு தனிப்படை போலீசார் நேற்று நடத்திய சோதனையில் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திய 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு ரயில்களில் கஞ்சா கடத்துவதை தடுக்க ரயில்வே போலீசார் அனைத்து ரயில் நிலையங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதில், ஏராளமான கஞ்சா பார்சல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், காட்பாடி, ஜோலார்பேட்டை மார்க்கமாக செல்லும் ரயில்களில் சேலம் உட்கோட்ட சிறப்பு பிரிவு எஸ்எஸ்ஐ தங்கராஜ் தலைமையில் 5 பேர் கொண்ட போலீசார் நேற்று முன்தினம் இரவு முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா வரை செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. நேற்று அதிகாலை காட்பாடி வந்த அந்த ரயிலில் போலீசார் ஏறி சோதனை மேற்கொண்டனர்.

ஜோலார்பேட்டை அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது முன்பதிவு செய்யப்பட்ட ‘டி-4’ கோச் பெட்டியின் கழிவறை அருகே 2 டிராவல் பேக் கேட்பாரற்று கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவற்றை கைப்பற்றி சோதனை செய்தனர். அதில், 11 கிலோ கஞ்சா பார்சல் இருந்ததை பறிமுதல் செய்தனர்.

இதை கடத்தியவர்கள் யார் என்று விசாரணை நடத்தியும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்திய நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: