ஆம்பூர் அருகே வனப்பகுதியில் ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு

ஆம்பூர் : ஆம்பூர் அருகே வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற ஆட்டை மலைப்பாம்பு ஒன்று விழுங்கியது. இது வீடியோவில் வைரலாகி வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பைரப்பள்ளியை சேர்ந்தவர் உமா(50). இவர் 15க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.  நேற்று முன்தினம் தனது ஆடுகளை அருகில் உள்ள ஊட்டல் வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். மேலும் இவருடன் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சிலரும் தங்களது ஆடு, மாடுகளை ஓட்டிச்சென்றனர். அங்குள்ள ஜானார்பெண்டை  பகுதியில் ஆடுகள் நேற்று முன்தினம் மாலை  மேய்ந்து கொண்டிருந்தது.

அப்போது சுமார் 10 அடி நீளமுள்ள  மலைப்பாம்பு ஒன்று அங்கு ஊர்ந்து வந்தது. இந்த பாம்பை கண்ட உமா மற்றும் உடன் வந்த சிறுவர்கள் சிலர் அலறியடித்து ஓடினர். அந்த மலைப்பாம்பு அருகில் இருந்த உமாவுக்கு சொந்தமான உரு ஆட்டை கவ்வி பிடித்தது. பாம்பிடம் இருந்து தப்பிக்க ஆடு போராடியும் முடியவில்லை. அந்த ஆட்டை பாம்பு தனது பிடிக்குள் வைத்து சுமார் ஒரு மணி நேரத்தில் விழுங்கிவிட்டது. இதனால் உமா அதிர்ச்சியுடன் மற்ற ஆடுகளை அழுதுகொண்டே தனது வீட்டிற்கு ஓட்டிவந்துள்ளார்.இதற்கிடையில் உமாவுடன் சென்ற சிறுவர்கள் சிலர், ஆட்டை மலைப்பாம்பு விழுங்குவதை தங்களது செல்போனில் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளனர். இதை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Related Stories: