கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட நடன மங்கை சினி ஷெட்டி ‘மிஸ் இந்தியா’-வாக தேர்வு

மும்பை: கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட சினி ஷெட்டி, மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் மிஸ்  இந்தியா இறுதிப் போட்டி நடைபெற்றது. போட்டியாளர்கள் அனைவரும் தங்களின்  அழகிலும், ஸ்பாட் ஆன்சர் ஸ்டைலிலும் மக்களின் மனதை கொள்ளை அடித்தனர்.  அவர்களில் இந்த ஆண்டுக்கான மிஸ் இந்தியாவாக கர்நாடகாவை சேர்ந்த சினி ஷெட்டி  தேர்ந்தேடுக்கப்பட்டார்.

31 இறுதிப் போட்டியாளர்களைத் தோற்கடித்து, சாதனை படைத்துள்ளார். ராஜஸ்தானின் ரூபல் ஷெகாவத், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஷினதா சவுகான் ஆகியோர் அடுத்தடுத்த இடத்தை  பிடித்துள்ளனர். நடுவர்கள் குழுவில் நடிகைகள் மலைக்கா அரோரா, நேஹா தூபியா, டினோ  மோரியா, ராகுல் கண்ணா, ரோஹித் காந்தி மற்றும் ஷமக் டாபர் ஆகியோர்  இடம்பெற்றிருந்தனர்.

இவர்கள் தவிர பாலிவுட் பிரபலங்கள் பலரும் இந்த  நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்ட சினி ஷெட்டி, தற்போது பட்டய நிதி ஆய்வாளர் படிப்பை  படித்துக் கொண்டுள்ளார். நடனத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர்,  பரதநாட்டியம் கற்று வருகிறார். நான்கு வயதில் நடனமாடத் தொடங்கிய இவர், 14  வயதிற்குள் பல மேடைகளில் நடனமாடி உள்ளார். கர்நாடகாவை பூர்வீகமாகக்  கொண்டவராக இருந்தாலும், மும்பையின் மாயநகரியில் பிறந்தவராவார்.

Related Stories: