சுருக்குமடி வலை பயன்படுத்த எதிர்ப்பு 2வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை-ஆட்சியரை சந்தித்து முறையிட முடிவு

சிதம்பரம் : பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் பகுதியில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இங்கிருந்து பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க செல்வார்கள். இந்நிலையில் கடலில் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலையை பயன்படுத்தி ஒரு சில மீனவர்கள் மீன் பிடித்து வருவதால் விசைப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கிராம மீனவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

32 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று 2வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் ஏராளமான படகுகள் பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. படகுகள் இயங்காததால் மீனவர்கள் தங்களது வலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து விசைப்படகு பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் பாண்டியன் கூறுகையில், சுருக்கு மடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதாலும் அதிக திறன் கொண்ட இன்ஜினை பயன்படுத்துவதாலும் விசைப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 32 கிராமங்களைச் சேர்ந்த ஒரு லட்சம் பேர் இந்த தொழிலை நம்பி இருக்கின்றனர். சுமார் 5000 படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இது குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட உள்ளோம். அதன் பிறகும் தீர்வு கிடைக்கா விட்டால் முதல்வரை கூட சந்தித்து முறையிட திட்டமிட்டுள்ளோம், என்றார்.

Related Stories: