உச்சிப்புளி அருகே அரியமான் கடலில் பாதுகாப்பற்ற படகு சவாரி

ராமநாதபுரம் : உச்சிப்புளி அருகே அரியமான் கடலில் பாதுகாப்பு சாதனங்களின்றி படகு சவாரி தொடர்கதையாக உள்ளது.ராமநாதபுரம்- ராமேஸ்வரம் நெடுஞ்சாலை ஓரம் உச்சிப்புளி அருகே அரியமான் கடற்பகுதி உள்ளது. அடர்த்தி மிகு சவுக்கு மரங்கள் நிறைந்த இங்கு தூய காற்றை சுவாசித்தவாறு அரியமானின் கடலழகை ரசிக்கலாம். இக்கடல் அமைதியான அலையால் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது. அரிய மான் வரும் சுற்றுலா பயணிகள் கடலோரத்தில் குளித்து குதூகலிக்கின்றனர். குழந்தைகளுடன் குடும்பத்துடன் வருவோர் முதலில் செல்ல விரும்புவது படகு சவாரி தான்.

ரூ.100, ரூ.50 என இருவித கட்டணத்தில் படகு சவாரிக்கு பயணிகள் கடலின் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை அழைத்து செல்லப்படுகின்றனர். படகு சவாரி செல்வோருக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கப்படுவதில்லை. மேலும் அனுமதிக்கப்பட்ட பயணிகளை காட்டிலும் கூடுதல் பயணிகள் ஏற்றிச்செல்லப்படுகின்றனர். இதனால் படகு நிலை குலைந்து கடலில் மூழ்கும் அபாயம் நீடிக்கிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வாளை தீவு பகுதியில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி உல்லாச சுற்றுலா சென்ற படகு நடுக்கடலில் மூழ்கி 5க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால், அரியமான் கடலில் தொடரும் பாதுகாப்பற்ற படகு சவாரியை முறைப்படுத்த சம்பந்தப்பட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: