விராலிமலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆட்டுச் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

விராலிமலை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஏராளமானோர் திரண்டதால் விராலிமலை ஆட்டுச்சந்தை களைகட்டியது. ரூ.1கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வாரந்தோறும் திங்கள்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். வரும் 10ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆடுகள் விற்பனை அதிகமாக இருக்கும் என்பதால், வியாபாரிகளும், விவசாயிகளும் விராலிமலை சந்தைக்கு கூடுதலாக ஆடுகளை கொண்டுவந்திருந்தனர்.

அதிகாலை 4 மணிக்கு கூடியிருந்த சந்தையில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமானோர் ஆடுகளை வாங்கி வருவதற்காக கூடினர். இதுவரை ரூ.1கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஒவ்வொரு ஆடும் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரம் வரை விற்பனையானது. சந்தையில் போட்டிபோட்டுக்கொண்டு ஆடுகளை ஏலம் கேட்டு வாங்கி சென்றனர். விராலிமலை சந்தையில் ஆடுகளை வாங்குவதற்காக ஏராளமானோர் கூடியதால் திருவிழா கூட்டம் போல் களைகட்டி காணப்பட்டது.          

Related Stories: