மராட்டியத்தில் ஆட்சியை தக்க வைத்தார் ஏக்நாத் ஷிண்டே... 164 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்தார்!!

மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே அரசு வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜ, சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால், முதல்வர் பதவி யாருக்கு என்ற மோதலில் பாஜ பதவியை விட்டுத்தராததால் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அதிருப்தி அடைந்தார். பின்னர் உத்தவ் தாக்கரே பாஜவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு அமைத்து முதல்வரானார்.

இந்த நிலையில், கடந்த மாதம் 20ம் தேதி சட்ட மேலவை தேர்தல் முடிந்த கையோடு ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பிரிந்து சென்றார். இந்த அணி போர்க்கொடி தூக்கிய பிறகு, அரசு மீது கடந்த மாதம் 30ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், அதற்கு முதல் நாளே முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ததால் அரசு கவிழ்ந்தது. மறுநாள் பாஜ ஆதரவோடு ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வராக பா.ஜ தலைவர் தேவேந்திர பட்நவிஸ் பதவியேற்றார். தொடர்ந்து நேற்று சபாநாயகர் பதவிக்கு நடந்த தேர்தலில் ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கொலாபா தொகுதி எம்.எல்.ஏ. ராகுல் நர்வேர் வெற்றி பெற்றார்.

இதையடுத்து கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவுப்படி, நேற்று தேர்வான புதிய சபாநாயகர் ராகுல் தலைமையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான புதிய அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. ஒவ்வொரு உறுப்பினரையும் நிற்கவைத்து அவரது வாக்கை சட்டப்பேரவை அதிகாரிகள் பதிவு செய்தனர். பெரும்பான்மைக்கு 144 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில் 164 வாக்குகள் பெற்று ஷிண்டே அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. பாஜகவின் 106 எம்எல்ஏக்கள், சிவசேனா அதிருப்தி அணியின் 39 வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் உட்பட தங்கள் அணியில் 164 எம்எல்ஏக்கள் ஆளும் கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு அளித்துள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதன் மூலம் மராட்டியத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார்.

Related Stories: