மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் நடந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சரியே: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் நடந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சரியே என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. கடந்த 2020-21ம் கல்வியாண்டுக்கு மருத்துவ மேற்படிப்பில் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 110 காலி இடங்களில் கலந்தாய்வு நடத்தாமல் 90 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதாக கூறி மருத்துவர்கள் சந்தோஷ்குமார், கீதாஞ்சலி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்கள். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்த அறிக்கையில் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடத்த மருத்துவ தேர்வுக்குழுவின் அப்போதைய செயலாளர் செல்வராஜ் தான் காரணம் என்றும் அவர்தான் தன்னுடைய அதிகாரத்தை துஸ்ப்பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த முறைகேட்டில் தொடர்புடைய அடையாளம் தெரிந்த, தெரியாத நபர்களுக்கும், தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யும்படியும், மருத்துவ கல்வி இயக்குநரக அதிகாரிகளுக்கு எதிராகவும், சம்பந்தப்பட்ட துறையினருக்கு எதிராகவும் விசாரணை நடத்தி சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தேர்வுக்குழு முன்னாள் செயலாளர் செல்வராஜ் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது செல்வராஜ் சார்பில், கல்லூரிகள் தான் அதிக கட்டணம் வசூலித்ததாகவும், ஆனால் தேர்வுக்குழு செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், மாணவருக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீட்டை செல்வராஜிடம் இருந்து வசூலிக்க உத்தரவிட்டதாகவும், மனுதாரர் எந்த கல்லூரிக்கும் சாதகமாக செயல்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் அரசு தரப்பில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார்கள். இந்நிலையில், இன்று பிறப்பித்த உத்தரவில் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் நடந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சரியே என்று தீர்ப்பளித்திருக்கிறார்கள். தேர்வுக்குழு முன்னாள் செயலாளர் மேல்முறையிட்டு வழக்கை முடித்து வைக்க உத்தரவிட்டுள்ளனர். அவர் மீதான துறை ரீதியான விசாரணை 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பென்ஷன் பலன்களை நிறுத்தி வைக்க பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டனர்.

Related Stories: