சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரம்: ஈரோடு சிறையில் உயர்மட்ட மருத்துவக்குழு விசாரணை

ஈரோடு: ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்கப்பட்ட வழக்கில், ஈரோடு சிறையில் மருத்துவ உயர்மட்ட குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்திய 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை வழக்கில் மருத்துவ உயர்மட்ட குழுவினர் ஒருபுறமும், அதேசமயம் காவல்துறையினரும் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை பொறுத்தமட்டில், சிறுமியின் தாயார், தாயின் 2வது கணவர், ஆதார் அட்டையை மாற்றம் செய்த ஜான் மற்றும் இடைத்தரகர் மாலதி ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு கிளைச்சிறை, கோபியில் உள்ள மாவட்ட சிறை மற்றும் கோவை மத்திய சிறை உள்ளிட்ட 3 சிறைகளில் 4 பெரும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த 4 பேரிடம் போலீசார் ஏற்கெனவே விசாரணையை நடத்தி முடித்திருந்த நிலையில்,தற்போது கருமுட்டை விற்பனை தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிப்பதற்காக தமிழக அரசு நியமித்திருந்த மருத்துவ உயர்மட்ட குழு விசாரனை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே அக்குழுவினர் சிறுமியிடம் நடத்திய விசாரணையின் போது, அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளிலும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் கைதாகி, சிறையில் இருக்கக்கூடிய 4 பேரிடமும் விசாரணை நடத்துவதற்கு மருத்துவ உயர்மட்ட குழுவினர் நீதிமன்றத்தில் அனுமதி கோரி இருந்த நிலையில், இன்று ஒருநாள் மட்டும் விசாரணை நடத்துவதற்கு ஈரோடு மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது. அதன் அடிப்படையில், சென்னையில் இருந்து வந்த உயர்மட்ட மருத்துவக்குழு ஜே.டி.விஸ்வநாதன் தலைமையிலான 4 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்டமாக ஈரோடு கிளைச்சிறையில் உள்ள, ஆதார் அட்டையை மாற்றம் செய்த 4 குற்றவாளியான ஜானிடம் சுமார் 1 மணிநேரம் விசாரணை நடைபெற்றது.

சிறைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் ஜானிடம் இருந்து பல்வேறு தகவல்களை வாக்குமூலமாக பெற்று, அதனை பதிவுசெய்துள்ளனர். தற்போது விசாரணை முடிவு பெற்ற நிலையில், அடுத்ததாக கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சிறுமியின் வளர்ப்புதந்தையிடம் விசாரணை நடத்துவதற்காக, மருத்துவக்குழுவினர் சென்றுள்ளனர். அதையும் முடித்துக்கொண்டு, கோவை மத்திய சிறையில் உள்ள சிறுமியின் தாயார் மற்றும் இடைத்தரகர் மாலதியிடமும் விசாரணை நடத்த உள்ளனர். குற்றவாளிகள் 4 பேரிடமும் விசாரணை நடத்தி முடித்த நிலையில், அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை விசாரணை அறிக்கையாக அரசுக்கு அளிக்க உள்ளனர். அதன் அடிப்படையில் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.                    

Related Stories: