கண்மாயை குத்தகைக்கு எடுப்பதில் ஏற்பட்ட கடும் போட்டியால் நடத்தப்பட்ட தேர்தல்: திருமங்கலம் அருகே ருசிகர சம்பவம்

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கண்மாயை குத்தகைக்கு எடுப்பதில் ஏற்பட்ட கடும் போட்டியால் தேர்தல் நடத்தப்பட்ட ருசிகர சம்பவம் நடைபெற்றது. திருமங்கலம் அருகே உள்ள நிலையூர் கண்மாய் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த கண்மாயில் வளர்க்கப்படும் மீன்களை  கூட்டுறவுச்சங்கம் மூலம் ஆண்டுதோறும் உள்ளூர் மக்களுக்கு ஏலம் விட்டு மீன்பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்படுகின்றது. இந்த ஆண்டு கண்மாயை குத்தகைக்கு விடுவதற்கான ஏலத்தில் கடும் போட்டி நிலவியதால் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் குத்தகை எடுப்பதற்கு தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த தேர்தல் நிலையூர் அரசு பள்ளியில் நடைபெற்றது. நிலையூர் கண்மாய் மூலம் பாசன வசதி பெரும் பகுதியில் சொந்த நிலம் உள்ள விவசாயிகளுக்கு வாக்குசீட்டுகள் வழங்கப்பட்டு தலைவர் மற்றும் 4 உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. அமைதியான முறையில் நடைபெற்ற தேர்தலில் வாக்காளர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த வாக்கு பெட்டியில் வாக்குகளை செலுத்தினர். பதிவான வாக்குகள் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

அதிக வாக்குகள் பெரும் வேட்பாளர் குத்தகை எடுப்பதற்கு ஏற்றவர் என மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு நிலையூர் கண்மாயில் மீன்பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்மாய் ஏலம் பிரச்னையை தவிர்க்க தேர்தல் நடத்திய அதிகாரிகளின் நூதன முயற்சி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories: