பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை 22 மணி நேரத்தில் கேரளாவில் மீட்பு: போலீசாருக்கு குவியும் பாராட்டு..!!

கோவை: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நேற்று காலை கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை அடுத்த 22 மணி நேரத்தில் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொடுவாயூரில் மீட்கப்பட்டிருக்கிறது. பொள்ளாச்சி குமரநகரை சேர்ந்த யூனுஸ் மற்றும் திவ்யபாரதி தம்பதியினருக்கு கடந்த புதன்கிழமையன்று பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை நேற்று அதிகாலை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் 3 டிஎஸ்பிகள் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடத்தப்பட்ட குழந்தை தேடப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை பாலக்காடு மாவட்டம் கொடுவாயூர் பகுதியில் குழந்தை மீட்கப்பட்டது. பின்னர் காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தார். கண்ணீர் மல்க குழந்தையை பெற்றுக்கொண்ட பெற்றோர்கள் காவல்துறைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கையில், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்படாததால் எதிரே உள்ள வணிக வளாகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கடத்தல் குறித்து ஆய்வு செய்து கோவை, திருப்பூர் மற்றும் பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் 6 தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் மேற்கொண்டு வந்தனர்.

இதில் 200க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து பின்னர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொடுவாயூர் பகுதியில் குழந்தை மீட்கப்பட்டதாக கூறினர். இந்த சம்பவத்தில் 2 பெண்களை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை கடத்தல் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது.

Related Stories: