மணலி புதுநகரில் பழுதடைந்த சமுதாயக்கூடம்: புதிதாக கட்டித்தர கோரிக்கை

திருவொற்றியூர்: மணலி மண்டலம் 15வது வார்டுக்குட்பட்ட மணலி புதுநகரில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு கூலி தொழிலாளர்கள் மற்றும் ஏழை, நடுத்தர மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இந்நிலையில், இப்பகுதியை சேர்ந்த ஏழை, எளிய மக்கள் திருமணம், நிச்சயதார்த்தம், பிறந்தநாள் விழா போன்ற நிகழ்ச்சிகளை நடத்தும் வகையில் கடந்த 2012ம் ஆண்டு தனியார் நிதி உதவியுடன் சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம் சமுதாயக்கூடம் கட்டியது. ஆனால் இதில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் இந்த சமுதாயக்கூடத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

பல ஆண்டுகளாக சமுதாயக்கூடம் பயன்படுத்தாமல் மூடப்பட்டிருந்ததால் படிப்படியாக பழுதாகி கட்டிட தரை விரிசலாகியதோடு சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்தன.  இந்த சமுதாயக்கூடம் இடிந்து விழுந்து விடுமோ என்று அச்சப்பட்ட பொதுமக்கள்  இந்த சமுதாயக்கூடத்தை இடித்து விட்டு அனைத்து வசதிகளின் கூடிய புதிய சமுதாயம் கட்ட வேண்டும் என்று  பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஏழை,எளிய மக்கள் வேறு வழி இல்லாமல் அதிக பணம் கொடுத்து தனியார் திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 15வது வார்டு திமுக கவுன்சிலர் நந்தினி கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி நடைபெற்ற சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் இந்த சமுதாயக்கூடம் பழுதடைந்துள்ளதை சுட்டிக்காட்டி இந்த சமுதாயக்கூடத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய சமுதாயம் கட்டி தர வேண்டும் என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவிடம் கோரிக்கை வைத்தார். மேயரும் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக பதில் அளித்தள்ளார்.

Related Stories: