வரதட்சணை புகார் வழக்கில் நேர்மையாக விசாரணை: பெண் இன்ஸ்பெக்டர் பதில் மனு

சென்னை: வரதட்சணை கொடுமை புகார் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில், நேர்மையான முறையில் விசாரணை நடத்தியதாக, பெண் இன்ஸ்பெக்டர் பதில் மனுவில் தெரிவித்துள்ளார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் ரஜினிஸ்ரீ(30). இவர், கடந்தாண்டு ஜூலை 8ம் தேதி, வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், தனது கணவர் அருண்குமார் மீது வரதட்சணை புகார் அளித்தார். இந்த புகார் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில், ரஜினிஸ்ரீ வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, 15வது மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் முரளிகிருஷ்ணா ஆனந்தன் முன் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு, பல முறை விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி, புகார் மீது விசாரணை செய்து ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார். கடந்த முறை, மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, `மனுதாரர் புகாரை திரும்ப பெறவில்லை. பெண் இன்ஸ்பெக்டர் நீதிமன்றத்தில் தவறான தகவலை தெரிவித்துள்ளார்’ என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அசோக்குமார் தெரிவித்தார்.

இதையடுத்து, பெண் இன்ஸ்பெக்டர் நேரில் ஆஜராக வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, பெண் இன்ஸ்பெக்டர் நேரில் ஆஜரானார்.  இந்நிலையில், இந்த வழக்கில் பெண் இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி பதில் மனு தாக்கல் செய்தார். அதில், `மனுதாரரின் புகார் மனு மற்றும் நீதிமன்ற உத்தரவுபடி, விசாரணையை நேர்மையாக நடத்தியுள்ளேன். மனுதாரர் கூறுவது போல் சட்டத்துக்கு விரோதமாக நடந்து கொள்ளவில்லை. எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Related Stories: