புழல் பிரதான சாலையில் திரியும் மாடு, குதிரைகளால் விபத்து: வாகன ஓட்டிகள் தவிப்பு

புழல்: புழல்  பிரதான சாலையில் மாடு மற்றும் குதிரைகள் சுற்றித் திரிவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதால், இவற்றை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், புழல் காந்தி பிரதான சாலை மற்றும் சுற்றுவட்டார சாலைகளில் ஏராளமான மாடுகள், குதிரைகள் போக்குவரத்திற்கு இடையூறாக குறுக்கும் நெடுக்குமாக சுற்றி திரிகின்றன.

இதனால், காலை நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் ஆட்டோவில் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர்களை அழைத்து செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். மேலும், சாலையில் நடந்து செல்லும் பள்ளி மாணவர்கள், முதியவர்கள் உள்பட பலரை இந்த மாடுகள் விரட்டி சென்று முட்டுகின்றன. இதனால் உயிர் பயத்தில் தப்பி ஓடும் அவலநிலை உள்ளது. இதில் சிலர் கீழே விழுந்து படுகாயமடைகின்றனர். இதுபோன்று, சாலையில் சுற்றித் திரியும் மாடுகள், குதிரைகளை அவற்றின் உரிமையாளர்கள் பிடித்து அடைப்பதில்லை. இதனால், இந்த சாலையில் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

எனவே, இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு, புழல் பகுதிகளில் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகள், குதிரைகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: